செவ்வாய், 8 ஜூலை, 2014

ஓவியாவின் 1$ ஷாப்பிங்





எங்கள் தமிழ் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையும். இதில் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தமிழ் வகுப்பும், கால் மணி நேரம் இடைவேளையும், பிறகு 4.15 மணி முதல் 5 மணி வரை தன்னறிவியல் (self science) வகுப்பும் நடக்கும். இதில் தன்னறிவியல் வகுப்பானது சிறிய குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகள் என்று இரண்டு வகுப்புகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தன்னறிவியல் வகுப்புகளை எங்கள் பள்ளிக்கு அறிமுகப்படுத்தியவர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள். அவர் தான் சிறிய குழந்தைகளின் தன்னறிவியல் வகுப்பை எடுப்பவர். சென்ற வகுப்பில் அவர் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அதாவது, குழந்தைகளிடம் ஒரு டாலரை ($1) கொடுத்து, அவர்களையே தனியாக ஷாப்பிங் செய்ய சொல்ல வேண்டும் என்பது. குழந்தைகள் அந்த ஒரு டாலரில், மிட்டாய் வகையறாக்களை வாங்கக்கூடாது. மேலும் உபயோகமுள்ளவற்றை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்ற வாரமும், இந்த வாரமும் இங்கு குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை. இந்த விடுமுறையில் அவர்கள் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, அடுத்த தன்னறிவியல் வகுப்பில், அவர்கள் என்ன வாங்கினார்கள், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்று சொல்ல வேண்டும்.

ஓவியாவும், ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்து அதை நான் அண்ணா மாமா வகுப்பில் காட்டி சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நானும் இரண்டு நாட்கள் முன்பு, சரி நாம கடைக்கு போகலாம், நீங்க போய் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்யுங்கள் என்று சொன்னேன். உடனே ஓவியா, அப்பா, ஒரு டாலர் கொடுங்கள்” என்று கேட்டார். நானும் கடைக்கு போனவுடனே கொடுக்கிறேன் என்று சொன்னேன். என்னிடம் மணிப்பர்ஸ் இருக்கிறது, அதில் வைத்துக்கொள்கிறேன் என்று கூறினார். நானும் ஒரு டாலரை கொடுத்தவுடன், அந்த மணிப்பர்ஸை திறந்து அதில் போட்டுக்கொண்டார்.





இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இனியா, எனக்கும் காசு கொடுங்கள் என்று கேட்டார். நல்லவேளை, அதே மாதிரி மணிப்பர்ஸ் வேண்டும் என்று கேட்கவில்லை. இனியவ்வின் பாக்கெட்டில் ஒரு டாலரை போட்டுவிட்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு எங்கள் ஊரில் (இங்கில்பர்ன்) ஷாப்பிங்க்கு போனோம். அங்கே ஒரு கடையை மூடுவதால்,closing down sale” என்று போட்டு வெளியில் எல்லாம் ஒரு டாலர், இரண்டு டாலர் வெளியில் வைத்திருந்தார்கள்.







ஓவியாவிடம், இதிலில் ஒரு டாலருக்கு என்ன வேண்டும் என்று பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் கையில் மணிபர்ஸை வைத்துக்கொண்டு, அந்த இடத்தையே சுற்றிக்கொண்டு வந்தார். ஒரு டாலருக்கு அதிகமாக உள்ள பொருட்கள காமிச்சு, இது எத்தனை டாலர் என்று கேட்க, நானும் அந்த பொருட்களுக்கு கீழே ஒட்டியுள்ள விலைப்பட்டியலை காமித்து சொன்னவுடன், ஒரு டாலர் உள்ள பொருட்களிடம் சென்று பார்த்து, ஒரு பென்சில் கேஸ், இரண்டு பென்சில், மூன்று குட்டி அழிப்பான்கள் (ரப்பர்) எல்லாம் செட்டாக ஒரு டாலர் என்று போட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டார். மீண்டும் அந்த இடத்தை சுற்றிப்பார்க்கும்போது, ஐம்பது சென்ட்க்கு (50 cents) சில பொருட்கள் இருந்தன. அவருக்கு இம்பது சென்ட் ஒரு டாலரை விட பெருசா என்று தெரியவில்லை. அவருக்கு சென்டை (cents), புரிய வைத்தவுடன், அதிலிருந்து ஒரு water spray பொருளையும் எடுத்துக்கொண்டு, எனக்கு இந்த இரண்டில் எதை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை, நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்.


நானும், வாங்குவது நீங்கள் தான், அதனால் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னேன். சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்து விட்டு, அந்த பென்சில் செட்டை வைத்துவிட்டு, இந்த water sprayயை எடுத்துக்கொண்டார். எதனால் இதை எடுத்துக்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, இதை வைத்து நான் செடிக்கு தண்ணி ஊற்றுவேன். மேலும் இது 50 சென்ட் தான் என்று கூறினார்.



இதில் இனியா, ஆரம்பத்துலேயே அந்த water spray கையில் எடுத்து வைத்துக்கொண்டார். அவருக்கு அக்கா மாதிரி ஒரு குழப்பமும் வரவில்லை.






சரி, இரண்டு பேரும் அந்த பொருளை எடுத்துக்கொண்டு கடைக்குள் போய் பில் போட்டு வாங்கிக்கிட்டு வாங்க என்று சொன்னேன். இருவரும் உள்ளே சென்று அந்த பொருளை காமித்து, ஒரு டாலரை இருவரும் கொடுத்தார்கள். அந்த பில் போடுகிற பெண்மணி, இருவரிடமும், “உங்களுக்கு 50 சென்ட் திருப்பி வேண்டுமா” என்று கேட்டார். ஓவியா ஆமாம் என்று கூறினார். இனியாவுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை, தாராள பிரபுவாக எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்புறம் 50 செண்டை அவர்கள் திருப்பிக்கொடுத்தவுடன், ஓவியா அதை மணிபர்ஸில் வைத்துக்கொண்டார். இனியா, அதனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஓவியாவிற்கு மகிழ்ச்சி என்றால் அப்படி ஒரு மகிழ்ச்சி. பிறகு வீட்டுக்கு வந்தவுடன், அந்த 50 செண்டை என்னிடம் கொடுத்து, எனக்கு வேறு ஏதாவது வாங்கும்போது இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்.




ஆஹா, பரவாயில்லை, காசின் மதிப்பு தெரிகிறதே என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது.





33 கருத்துகள்:

  1. மிக நல்ல ஒரு விஷயம்! சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பணத்தின் அருமையும், எதை வாங்க வேண்டும் எதை வாங்கக் கூடாது, செலவு எப்படி செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுப்பது மிகவும் நல்ல ஒரு பழக்கம்! தங்கள் மகள்கள் இருவரும் வாங்கிய பொருட்கள் மிக நல்ல பொருட்கள். செடிக்குத் தண்ணீர் ஊற்றுவேன் என்று சொன்னார் பாருங்கள்....அதற்கு ஓவியா அவர்களுக்குப் பாராட்டுக்கள்! எங்கள் அன்பை ஓவியா அவர்களுக்கும், இனியா அவர்களுக்கும் தெரிவித்து எங்கள் பாராட்டுக்களையும் தெரிவித்துவிடுங்கள்! நல்ல வகுப்புகள்! அருமை!

    பதிலளிநீக்கு
  2. இனைய நேரம் இப்போ முடிய போகுது. நாளைக்கு கருத்து சொல்றேன் ஓவியா செல்லம். but உன் போட்டோஸ் எல்லாம் சூப்பர் ட!!

    பதிலளிநீக்கு
  3. நல்ல விஷயம் ..பணத்தின் அருமை குழந்தைகளுக்கு தெரிவது அவர்களுக்கு பிற்காலத்தில் உதவும் ...
    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் இனியா மற்றும் ஓவியாவுக்கு

    பதிலளிநீக்கு
  4. சிறுவயதில் இப்பழக்கத்தை கொண்டுவருவது மிக நல்ல விடயம் இங்கு செலவளிக்கும் பணத்திற்கு வரவு-செலவு கணக்கும் உண்டு. அதனால் தேவையில்லாத செலவும்,சேமிப்பும் பழக்கத்திற்கு வருகிறது பசங்களுக்கு. ஓவியாவிற்கும்,இனியாவிற்கும் வாழ்த்துக்கள்,பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  5. சிறு வயதிலேயே இப்படி தேவையான பொருட்களை வாங்க கற்றுக் கொள்ளச் செய்வது நல்ல விஷயம்......

    குழந்தைகளுக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  6. எப்படியோ ஊதாரித்தனம் இல்லாமல் வாழப்பழகிக்கொண்டால் நல்லதுதான். வாழ்த்துக்கள் குட்டீஸ்.

    பதிலளிநீக்கு
  7. மிக நல்ல பழக்க வழக்கங்களை செய்து வருகிறீர்கள்... பாராட்டுக்கள்...

    செல்லங்களுக்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  8. பொருட்களை வாங்க கற்றுக் கொள்ளச் செய்வது நல்ல விஷயம்....


    வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  9. சிறு வயதிலேயே நல்ல பழக்கங்கள். முடி வெடுக்கும் திறமை, காசை கணக்கு பார்த்து வாங்குதல், அதை அடுத்ததற்கு என அப்பாவிடம் பத்திரப்படுத்தல் நன்று, நன்று.செடிகளுக்கு தண்ணீர் விட வாங்கியதும், அதை பிடித்துக் கொண்டு சந்தோஷமாக நிற்பதும் அழகு. குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. ஆஹா! நானும் ஷாப்பிங் பற்றி ஒரு பதிவு போடலாம்னு நினைத்தேன். ஆன என் மருமகள்கள் அளவு அது க்யூட் டா இருக்காதே! முதல் முறை ஷாப்பிங் போன தங்கங்களுக்கு வாழ்த்துகள் !!

    பதிலளிநீக்கு
  11. இப்படி வளர்ற பிள்ளைங்க உங்களைவிட நல்லாவே வருவாங்க !

    பதிலளிநீக்கு
  12. நல்ல முயற்சி ஓவியா & இனியா. 50 சென்ட் –டையும் மிச்சம் பிடித்து அழகான உபயோகமுள்ள “வாட்டர் ஸ்ப்ரே “ பாட்டில் வாங்கிய ஓவியா & இனியா இருவருக்கும் எனது பாராட்டுகள். நல்ல முடிவெடுக்கும் திறன் குழந்தைகளுக்கு வளர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  13. ஓவியாவின் உபயோகமான கொள்முதல் பாராட்டுக்குரியது எமது வாழ்துக்களை தெரிவிக்கவும்

    பதிலளிநீக்கு
  14. ஆஹா குட்டீஸ் நன்றாக செலக்ட் பண்ணியுள்ளீர்கள்.அத்துடன் அது நீண்ட நாள் பயன் தரும் ஒரு பொருளும் கூட. எனவே ஓவியா ரொம்ப கெட்டிக்காரி தான். வாழ்த்துக்கள் ஓவியா!.

    பணத்தையும் கொடுத்து முடிவு எடுப்பதற்கும்,சிக்கனத்தையும் பற்றி கற்றுக்கொடுப்பது நம் கடமை தான். நல்லவிடயம் நன்றி வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
  15. நல்ல பயனுல்ள முயற்சி .. சிறுவயதிலேயே சிந்திக்கும் திறனை சீர்ப்படுத்தும் பாடம்..!

    பதிலளிநீக்கு
  16. நல்ல விஷயம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் சகோதரரே!

    பதிவைப் படித்ததும் உங்கள் பிள்ளைச் செல்வங்களைப் பாராட்டும் அதேவேளை,
    தன்னறிவியல் தந்த அந்த ஆசிரியரை வாழ்த்தவும் அதற்குமேலும்
    அன்பான பெற்றோராம் உங்களையும் உளமார வாழ்த்தவேண்டுமென
    ஆவலாகினேன்.

    உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் நிச்சயம் சிறப்பாகும்!

    இனிய நல் வாழ்த்துக்கள் சகோதரரே!

    பதிலளிநீக்கு
  18. நல்ல அனுபவங்களை எடுத்து வருகின்றேர்கள். தன்னறிவியலை ஊட்டும் ஆசிரியரைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. பிள்ளைகள் சிறுவயதில் இருந்தே இப்படி வளர்க்கப்படும் போது எதிர்காலத்தை புரிந்து நடந்து கொள்வார்கள் என்பது நிச்சயம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலமும் சிறப்பாக அமையும்

    பதிலளிநீக்கு
  19. வாழ்த்துக்கள் நல்ல அனுபவம்..
    ஒரு முறை எனது தங்கை நூறு ரூபாய் கொடுத்து நிறைமதியை உனக்குப் பிடித்ததை வாங்கிக்கொள் என்று சொல்ல செம காமடி அனுபவம் ஒன்று கிடைத்தது...
    நல்ல அனுபவம்
    இந்த செயல்பாட்டை எனது வகுப்பறைகளிலும் செய்யலாம் என நினைக்கிறன்..
    www.malartharu.org

    பதிலளிநீக்கு