புதன், 28 மே, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
இந்த பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் எவ்வாறு சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இங்கே நான் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். அதாவது வகுப்பறைக்குள் நடப்பதை ஓவியா ஞாபகம் வைத்து சொல்வதையும், வகுப்பில் அவர்கள் பயன்படுத்துகின்ற பயிற்சி தாள்களையும் வைத்து தான் நான் இங்கே எழுதுகிறேன்.

ஓவியா பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தபொழுது, அவருக்கு A,B,C,D பாட்டாக சொல்ல மட்டும் தான் தெரியும். மற்றபடி அவருக்கு எழுத்துக்களையெல்லாம் பார்த்துச் சொல்லத் தெரியாது. அவருடைய பெயரை மட்டும் எழுதத் தெரியும். அதே மாதிரி எண்களில் ஒன்று முதல் பதினைந்து வரை மட்டும் தான் சொல்லத் தெரியும். நிறங்களை சொல்லத் தெரியும். மற்றபடி வேறு எதுவும் தெரியாது. ஆனால் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து ஏறக்குறைய நான்கு மாதங்களில் அவருக்கு A,B,C,D எப்படி கேட்டாலும் தெரியும், மேலும் எழுத்துக்கூட்டி படிக்க முயற்சிக்கிறார். இரெழுத்து, மூன்றெழுத்து வார்த்தைகள் எல்லாம் எழுத்துக்கூட்டி படிக்கிறார். எண்களில் ஒன்று முதல் முன்னூறு வரை சொல்கிறார். ஒரு அடுக்கு (single digit) எண்களை கூட்டவும், கழிக்கவும் தெரிகிறது. எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு தெரிகிறது என்று எனக்கு ஒரே ஆச்சிரியம். இத்தனைக்கும் நாங்கள் வீட்டில் தனியாக சொல்லிக்கொடுப்பது இல்லை. (வெறும் வீட்டுப்பாடங்கள் மட்டும் தான் சொல்லிக்கொடுக்கிறோம்).

ஓவியாவிடம் இன்றைக்கு என்ன படித்தீர்கள் என்று தினமும் கேட்கும்பொழுதுதான், இங்கு சொல்லிக்கொடுக்கும் முறையே வித்தியாசமானது என்று தெரிந்தது. வகுப்பில் கொஞ்ச நேரம் ஆங்கிலப் பாடம்,கொஞ்ச நேரம் கணிதப்பாடம், கொஞ்ச நேரம் ஏதாவது கிராஃப்ட் வேலைப்பாடு செய்வது,கொஞ்ச நேரம் கதை படிப்பது (story reading) என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆங்கிலத்தை A – Apple, B – Bat என்று சொல்லிக்கொடுக்கமாட்டார்களாம். அதற்கு பதில் “போனிக்ஸ் (PHONICS) முறையில் தான் சொல்லிக்கொடுப்பார்களாம். அதாவது வார்த்தைகளை உச்சரிக்கும்போது ஏற்படுகிற ஒலியை வைத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். அடிக்கடி ஓவியா, ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லி,அதனுடைய முதல் வார்த்தை இந்த எழுத்தில் ஆரம்பிக்கிறது என்று சொல்லுவார். அதே மாதிரி, காரில் செல்லும்போது, சாலையில் தெரியும் பெரிய எழுத்துக்களை எல்லாம் எழுத்துக்கூட்டி படிக்க முயற்சிக்கிறார். நாம் ஏதாவது ஒரு வார்த்தைக்கு எழுத்துக்கோர்வையை (spelling) கேட்டால், உடனே அந்த வார்த்தையை phonic முறையில் உச்சரித்து பார்த்து, எழுத்துக்கோர்வையை சொல்ல முயற்சிக்கிறார். வகுப்புகளில் worksheets போன்றவற்றை பயன்படுத்தி எழுதவும், படிக்கவும் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்த worksheets சிலவற்றை கீழே பார்க்கலாம்.

இதே மாதிரி worksheetsசை பயன்படுத்தித் தான் எண்களையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.அந்த worksheetsகளில் எல்லாம் அவர்களை கலர் பண்ணச் சொல்லி, வகுப்பை போர் அடிக்காமல் சுவாரசியமாக கொண்டு செல்கிறார்கள். நோட்டுக்களையே அவர்கள் பயன்படுத்துவது கிடையாது. எல்லாம் இந்த மாதிரி worksheets தான். இதையெல்லாம் ஒரு ஃபைலில் போட்டு வைக்கச் சொல்கிறார்கள். 


(இப்படி தான் பேட்டர்ன் (pattern) கான்செப்டை கற்றுக்கொடுக்கிறார்கள்) 

சில நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் ஓவியா என்னிடம், “அப்பா உங்களுக்கு 3 + 4 = என்னவென்று தெரியுமா என்று கேட்டார்கள். நான் தெரியாது என்று சொன்னவுடன், இது கூட உங்களுக்கு தெரியலையா என்று சொல்லி, இரண்டு கைகளையும் பயன்படுத்தி 7 என்று கூறி, இது மாதிரி தான் எங்க மிஸ் சொல்லிக்கொடுத்தார்கள் என்று சொன்னார்கள்”. அதே மாதிரி இங்கு கழித்தலை, மாணவர்களுக்கு “from 5 take 3 = 2 “ என்று தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

இவை போக வாரவாரம் புதன்கிழமை நூலகத்திலிருந்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து கொண்டு வரலாம். அவரவருக்கு பிடித்தமான புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். அந்த புத்தகத்தை தினமும் அம்மணி ஒரு முறை படித்துக்காட்டுவார்கள். பள்ளியிலேயே நூலகப் புத்தகப்பை என்று ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

(இந்த வார நூலகப் புத்தகம்)(ஒவ்வொரு பக்கங்களிலும் இரண்டு அல்லது மூன்று வரிகள் தான் இருக்கும்)

ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று வகுப்புகளில் சில சைட் (sight words) வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு “it “, “up”, “sit” போன்ற நான்கைந்து வார்த்தைகளை சொல்லிக்கொடுத்து அந்த வார்த்தைகளையே அட்டைகளில் பிரிண்ட் எடுத்து வீட்டுப்பாடமாக கொடுக்கிறார்கள். வீட்டுபாடத்தையும் எவ்வாறு விளையாட்டாக செய்யச் சொல்கிறார்கள் என்பது பற்றி மற்றொரு பதிவில் சொல்லுகிறேன்.


வெள்ளி, 16 மே, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 2 (வகுப்பறை)


போன பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடம் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில், அவருடைய வகுப்பறை எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

நம் ஊரில் வகுப்புகளின் பிரிவுகளுக்கு – A,B,C என்று சொல்லுவார்கள். அதாவது 1A, 1B etc.. (இப்பொழுதும் அதே நடைமுறை தான் என்று நினைக்கிறேன்). இங்கு வகுப்பு ஆசிரியர்களின் குடும்ப பெயரின் முதல் எழுத்தைத்தான் அந்தந்த வகுப்புகளின் பிரிவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஓவியாவின் வகுப்பு KT. அதாவது Kinder, பிறகு அந்த வகுப்பாசிரியரின் குடும்ப பெயரின் முதல் எழுத்து.  
  நான் முதலில் அவருடைய வகுப்பு அறையின் கதவைத்தான் புகைப்படம் எடுத்தேன். வகுப்பிற்குள் படம் எடுக்க அனுமதிப்பாளர்களா என்று ஒரு சிறிய சந்தேகம். சரி, அவர்களுடைய வகுப்பு ஆசிரியையிடம் கேட்டுப் பார்க்கலாம், அனுமதி தந்தால், புகைப்படம் எடுக்கலாம், இல்லையென்றால் இந்த ஒரு புகைப்படமே போதும் என்று நினைத்து, நான் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்த நாளின் மாலையில் ஓவியாவின் வகுப்பு ஆசிரியையிடம் அனுமதி கேட்டேன். அவர்களும் நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் வகுப்பு தான் கொஞ்சம் அலங்கோலமாக இருக்கும், அது தான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கூறி அனுமதியளித்தார்கள். நான் உடனே வகுப்பிற்குள் சென்று, ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தேன். அப்போது அவர்களே, ஓவியாவை கூப்பிட்டு உன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்துக்கொள், உன் தந்தை உன்னை படம் எடுப்பார் என்று கூறி ஓவியாவை உள்ளே அனுப்பி, இருக்கையில் அமரச் செய்தார்.  நான் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். இது தான் அவர்களுடைய வகுப்பு. நாம் துணியை காயப்போடுவது போல், இங்கு மாணவர்களின் படைப்புகளை கயிற்றில் தொங்க விட்டிருக்கிறார்கள். ஸ்மார்ட் போர்டு (SMART BOARD )வகுப்பின் பின் பகுதி. இந்த வகுப்பில் படிக்கும் எல்லா மானவர்களின் புகைப்படத்தை ஒட்டியிருக்கிறார்கள்.  இதில் முதல் படம் தான் ஓவியாவின் படம். நான் இதை புகைப்படம் எடுக்கும்போது, ஓவியா அன்றைக்கு ஏதோ craft செய்திருக்கிறார்கள், அதனை நன்றாக ஒட்டுவதற்காக cellotape எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஓவியாவின் ஒரு படைப்புஇது தான் அவருடைய இருக்கையாம்!!!ஒவ்வொருவருடைய மேசையின் மீது அவர்களுடைய பெயரை ஒட்டி வைத்திருக்கிறார்கள். 

சரி, அவருடைய வகுப்பைப் பார்த்தாச்சு, இனி வகுப்பில் அவருக்கு எவ்வாறு கல்வியை சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம். 

பின் குறிப்பு: வகுப்பில் எவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை ஓவியா சொல்வதை வைத்து தான் நான் எழுதுகிறேன். 

ஞாயிறு, 11 மே, 2014

ஓவியா இனியாவின் அன்னையர் தின பரிசுகள்


இங்கு இந்த அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு அத்துப்படி. அந்த அளவிற்கு பள்ளியிலும் சரி, டே கேர் நிலையங்களிலும் சரி, அந்த தினங்களை பிரபலப்படுத்தி விடுவார்கள். இனியா வாரத்திற்கு இரு நாட்கள் டே கேர் செல்கிறார்கள். அன்னையர் தினம் ஞாயிற்றுக் கிழமை வந்தபடியால், அந்த டே கேரில் சென்ற வாரமே அன்னையர் தினத்தை கொண்டாடி விட்டார்கள். அன்றைக்கு அங்கு வரும் அனைத்து குழந்தைகளின் அன்னையர்களையும் அழைத்து கேக் எல்லாம் வெட்டி பிரமாதப்படுத்திவிட்டார்கள். போதாக்குறைக்கு, குழந்தைகளுக்கு அவர்களே அட்டையில் ஒரு கைவினைப் பொருளை செய்து அதில் அன்னையர்களை வாழ்த்தி எழுதியிருக்கிறார்கள்.  அந்த கைவினைப் பொருளை குழந்தைகளின் கையில் கொடுத்து, அதை அவர்கள் தங்கள் அன்னையிடம் கட்டிப்பிடித்து “HAPPY MOTHER’S DAY” என்று சொல்லி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இதில் இனியா தன் தாய்க்கு கொடுத்த அன்பு பரிசு தான் கீழே உள்ள படம்.

ஒரு அட்டையில், சிறிய கைப் பை (handbag) மாதிரி செய்து, அதில் உள்ளே அன்னையரை போற்றக்கூடிய வசனங்களை எழுதி கீழே இனியாவின் பெயரைப் போட்டு கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் தன் தாயிடம் “HAPPY MOTHER’S DAY” என்று சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.         

இது டே கேர் நிலையத்தில் நடந்த விஷயம். ஓவியாவின் பள்ளிக்கூடத்தில், அன்னையர் தினத்தில், அன்னைக்கு பரிசு கொடுப்பதற்காகவே ஒரு ஸ்டால் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதில் $4, மற்றும் $6க்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வைத்து, குழந்தைகளை ஈர்த்து இருக்கிறார்கள். ஓவியாவும், நீங்கள் வாரா வாரம் வங்கியில் போடுவதற்காக எனக்கு கொடுக்கும் பணத்திலிருந்து நான்கு டாலர்களை எடுத்துக் கொடுங்கள், நான் உங்களுக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். நாங்களும் நான்கு டாலரை கொடுத்தோம். ஓவியாவும் அந்த பள்ளிக்கூடத்திற்குள் இருக்கும் கடையில் என்ன வாங்குவது என்று ரொம்ப யோசித்து, இறுதியாக வாங்கியது தான் கீழே உள்ளே படம்.இதுவும் பார்க்க ஒரு குட்டி கைப் பை (handbag) மாதிரி தான் தெரியும். ஆனால் உள்ளே பார்த்தால்,ஒரு பக்கத்தில், சில்வரில் ஒரு சின்ன கத்தி, கத்திரிக்கோல், நெகம் வெட்டும் கருவி மற்றும் ஒரு போர்ஸிப் போன்ற ஒரு கருவி (இதற்கு எனக்கு சரியான பேர் தெரிய வில்லை). மற்றொரு பக்கத்தில் ஒரு சின்ன அட்டையை மட்டும் வைத்திருக்கிறார்கள். அதில் ஓவியா,HAPPY MOTHERS DAY”LOVE FROM OVIYA” என்றும், இவ்விரு வாக்கியங்களை சுற்றி, இருதய படங்களை வரைந்து, தன் அன்னைக்கு பரிசு அளித்திருக்கிறார்.


இந்த இரண்டு பரிசுகளையும் பெற்றுக்கொண்ட என் வீட்டு அம்மணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னிடம், "நீங்கள் மகளிர் தினத்துக்கு எனக்கு ஒரு பரிசையும் கொடுக்கலை, ஆனால் என் செல்வங்கள் எனக்கு அன்னையர் தினத்துக்கு மறக்க முடியாத பரிசை அளித்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்தாவது நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்று எனக்கு பாடம் எடுத்து விட்டார்கள்.  (நான் கணவனாக அமைந்ததே பெரிய பரிசு என்று அம்மணிக்கு ஏன் தான் புரிய மாட்டேங்குதோ!!!!)