ஞாயிறு, 15 ஜூன், 2014

இனியாவிற்கு இன்று நான்கு வயது ஆரம்பம் ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு????எங்களின் இரண்டாவது மகாரணி இனியாவிற்கு இன்று தான் மூன்று வயது முடிவடைந்து நான்கு வயது ஆரம்பமாகிறது. ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. வீடு முழுக்க உள்ள சுவற்றில் தன் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார் (கையில் பேனா கிடைத்தால் அது எழுதுகிறதா என்று சோதனை செய்வதே சுவற்றில் தான்). போதாக்குறைக்கு சோபாவிலும் அவருடைய கைவண்ணம் தெரியும். உங்களுக்கு எல்லாம் தண்ணீர் குடித்தால் வாந்தி வருமா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவருக்கு தண்ணீர் குடித்தால் வாந்தி வருமாம். அதைத்தான் இந்த பதிவில் சொல்லியிருந்தேன்.  தண்ணி குடித்தால் வாந்தி வரும் சரி, இன்றைக்கு பிறந்த நாளாக இருக்கிறதே, தலைக்கு குளிப்பாட்டுவோம் என்று தலைக்கு தண்ணீர் ஊற்றப்போனால், தலை குளிக்க வேணாம், சளி பிடிக்கும்னு” வேற சொல்றாங்க.

ஒரு நாள், ஓவியா சோபாவிற்கு கீழே உட்கார்ந்து என்னமோ செய்து கொண்டிருந்திருக்கிறார்கள், அப்போது இவுங்க சோபாவில் உட்கார்ந்து, காலை எடுத்து ஓவியாவின் தலை மேல் வைத்து, ஓவியாவை டிஸ்டர்ப் செஞ்சிக்கிட்டு இருந்திருக்காங்க. இதைப் பார்த்துக்கிட்டு இருந்த அம்மணிக்கு சரியான கோபம். உடனே, இனியாவிடம், உன் காலை எதுக்கு அக்கா தலை மேல வைக்கிற, பேசாம உன் தலை மேல் வச்சுக்கோன்னு சொல்லியிருக்காங்க, அதுக்கு இனியாவோட பதில் எப்படி இருந்துச்சுன்னா...


 (சோபாவில உள்ள கிறுக்கல்கள் எல்லாம் அவுங்களோட கைவண்ணம்) 

பிறந்த நாள் அதுவுமா, அவுங்களைப் பற்றி குறையே சொல்லிக்கிட்டு இருந்தால் நல்லா இருக்காது, அதனால், அவுங்களோட இன்றைய பிறந்த நாள் எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்.

அவுங்க காலையில எந்திரிச்சவுடனே, ஓவியா அக்கா அவுங்களுக்காக ஒரு பேப்பர்ல வாழ்த்துச் செய்தி எழுதி அவுங்க கிட்ட கொடுத்தாங்க. சியாந்திரம் முருகன் கோவில்ல சேக்கிழார் விழா நிகழ்ச்சியில ஓவியாயும் முதல் முறையா இனியாவும் கலந்துக்கிற நாடகம் இருந்ததுனால, அப்பப் போய் சாமி கும்பிட்டுக்காலம்னு காலையில கோயிலுக்கு போகலை.மதியம் கேக் வாங்கிவந்து அதை இனியா கட் பண்ணி எல்லோருக்கும் ஊட்டி விட்டாங்க.

சியாந்திரம் நான் எழுதிய “சைவ நீதி” என்னும் நாடகத்தை, எங்கள் தமிழ் பள்ளி மாணவர்கள் சிட்னி முருகன் கோவிலில், சேக்கிழார் விழா நிகழ்ச்சியில் மேடை ஏற்றினார்கள். அதில் இனியாவும் மேடையேறினார். எங்களுக்கு, அவருடைய பிறந்த நாள் அதுவுமாக கோவிலில் மேடை ஏறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு வசனம் எதுவும் இல்லை, ஆனால் எங்களின் உதவி இல்லாமல் அவர் மேடை ஏறியது தான் மிகுந்த ஆச்சிரியம். 

இப்படியாக அவரின் மூன்றாவது பிறந்த தினம் இனிதாக நிறைவடைந்தது.

அந்த நாடகத்தைப் பற்றிய பதிவை விரைவில் வெளியிடுகிறேன்.
செவ்வாய், 10 ஜூன், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)


இந்த பதிவுல ஓவியாவிற்கு, பள்ளியில் கிடைத்த வெகுமதிகளைப் பற்றி சொல்கிறேன்.

ஒவ்வொரு திங்கட்கிழமை காலையிலும் நடக்கும் அசெம்ப்ளியைப் பற்றி முதல் பகுதியில சொல்லியிருப்பேன். மற்ற நாட்களில் பாலர் வகுப்புகளுக்கு தனியாக அசெம்ப்ளி நடக்கும். இரண்டு வாரத்திற்கு ஒரு முறை(வெள்ளிக்கிழமையில்) , பாலர் வகுப்பு முதல் இரண்டாம் வகுப்பு வரையிலும், மூன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரையிலும் தனியாக ஒரு சின்ன ஹாலில் அசெம்ப்ளி நடக்கும். இந்த அசெம்ப்ளியானது காலை 11.30 மணிக்கு ஆரம்பித்து 12.30மணிக்கு முடிவடையும். இதிலும் பெற்றோர்கள் கலந்து கொள்ளலாம். இதில் விருது வாங்கப்படும் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதனால் அந்த பெற்றோர்கள் கலந்து கொண்டு, தங்கள் குழந்தை வாங்கும் விருதை கண்டுக்களிக்கலாம். இந்த அசெம்ப்ளியில்  ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வகுப்பு ஏதாவது ஒரு நிகழ்ச்சியை 5 நிமிடத்திற்கு வழங்குவார்கள். பிறகு மாணவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பார்கள். இதில் பள்ளிக்கூடம் ஆரம்பித்து முதல் வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில்,ஓவியா “Reading Skills”க்காக ஒரு “MERIT AWARD” வாங்கினார்.  


இது போக, ஆசிரியர்கள், மாணவர்களுக்கு “Being A Safe and Respectful Learner” என்ற ஒரு பச்சை அட்டையை வகுப்புகளில் வழங்குவார்கள். அவ்வாறு ஒரு மாணவன் 20 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால், அவனுக்கு ஒரு “Bronze Award” கிடைக்கும். 40 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Silver Award” கிடைக்கும். 60 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Gold Award” கிடைக்கும். 80 பச்சை அட்டைகளை வாங்கியிருந்தால் ஒரு “Diamond Award” கிடைக்கும். இந்த விருதுகள் அனைத்தும் சான்றிதழ்கள். ஒரு வருடத்திற்குள் எவ்வளவு பச்சை அட்டைகளை வாங்குகிறோம் என்பதை பொறுத்து இந்த விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகளும் வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில் கொடுக்கப்படும். இந்த வருடத்திற்காக கொடுக்கப்படும் “Bronze Award” விருதினையும் ஓவியா பெற்றார்.


(காணொளி சற்று சரியாக வரவில்லை)

                    (நாங்கள் மகளிர் கூட்டணியாக்கும்)

ஒரு வெள்ளிக்கிழமை அசெம்ப்ளியில், ஒவ்வொரு வகுப்பும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியை செய்து காட்ட வேண்டும் என்று சொல்லியிருந்தேன் அல்லவா, அம்மாதிரியான ஒரு நிகழ்ச்சியை வேறொரு வகுப்பு செய்யப்போவதை, ஓவியாவின் வகுப்பிலிருந்து, ஓவியா அறிமுகம் செய்து வைக்கிறார்.

பாலர் வகுப்புகளில் இருந்தே,  குழந்தைகளுக்கு மேடையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதை சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று நினைக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது.

ஓவியா வகுப்பில், கணக்கு பாடத்தில் முதலாவதாக வந்ததால், அவரின் ஆசிரியை அவருக்கு இந்த பேனாவை பரிசாக அளித்திருக்கிறார்.
அடுத்த பகுதியில், பள்ளிக்கூடத்தில் எந்த அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது என்பதையும், பச்சை அட்டை மாதிரி மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு அட்டைகளும் வழங்கப்படுகிறது. அவைகள் எதற்காக வழங்கப்படுகிறது என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.