சனி, 15 பிப்ரவரி, 2014

அப்பூதி அடிகளின் மகனாக ஓவியா


அப்பூதி அடிகள் வாழ்கை வரலாறு நாடகத்தில் அப்பூதி அடிகள் நாடகம்  ஓவியா அவரின் மூத்த மகன் திருநாவுக்கரசராக நடித்தார். நான் செய்த ஒரு மிகப் பெரிய தப்பு,  உங்களுக்கு வேட்டி கட்டிவிடுவோம் என்று ஓவியாவிற்கு முன்பே சொல்லாதது தான். அந்த நிகழ்ச்சியன்று அவருக்கு வேட்டி கட்டிவிட்ட பாதிப்பை இந்த புகைப்படத்தை பாருங்கள்.
சும்மாவே, அவருக்கு ஆண்களை பிடிக்காது. தன் வயதையொட்டிய ஆண் குழந்தைகளிடம் சட்டென்று பழக மாட்டார். அப்படி இருக்கிறவரிடம் நான் சேக்கிழார் விழா நிகழ்ச்சியன்று தான், நீ வேட்டி கட்டிக்கணும்னு சொல்லி, ஒரு பெரிய வெள்ளை துண்டை அவருக்கு வேட்டியாக, கட்டிவிட்டோம். அதைக் கட்டிவிட்டவுடன் அவருக்கு ஒரே அழுகை வர ஆரம்பித்து விட்டது. நான் நடிக்க மாட்டேன். எனக்கு பிடிக்காத டிரஸ் போட்டுவிட்டீங்கன்னு ஒரே அழுகை. இதுல வீட்டு அம்மணி வேற ஓரேடியா விபூதியை அவுங்க கழுத்துல பூசிட்டாங்க. அதுவும்  அவுங்களுக்கு தொண்டையை உறுத்த ஆரம்பிச்சிருக்கு. எனக்கோ ரொம்ப பயாமகி விட்டது. என்னடாது, ஓவியா நடிக்கலைன்னா வேற என்ன பண்றதுன்னு ஒரே யோசனை. நான், அம்மணி அப்புறம் என்னோட மாமியார் எல்லோரும் ஓவியாவை சமாதானம் செஞ்சு எப்படியோ நடிக்க வச்சுட்டோம். மேடைல கூட முகத்தை தூக்கிவச்சுக்கிட்டே தான் நடிச்சாங்க. ஓவியாவோட இந்த அழுகையில, என்னுடைய மாமியார் தான் ரொம்ப பயந்து போய், முருகா, உனக்கு உண்டியல்ல காசு போடுறேன், எப்படியாவது ஓவியா ஒழுங்கா நடிச்சிடணும்னு முருகனுக்கு லஞ்சம் எல்லாம் கொடுத்தாங்க.

மேலாயுள்ள படத்தில அப்பூதி அடிகளின் மகன் இலையை அறுக்கும்போது பாம்பு கடித்து இறந்து விடுவார். அவரை கோவிலில் படுக்க வைத்து திருநாவுக்கரசர் பதிகம் பாடி, அவரை உயிருடன் எழச் செய்வார். நான் சொல்லிக்கொடுத்தப்படி, தர்ஷன் ஒரு முறை பதிகம் படித்தவுடன், ஓவியா எந்திரிப்பார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் போது, அவர் எந்திரிக்கவில்லை. தர்ஷனுக்கு என்னப்பண்றதுன்னு தெரியலை. நான் பிண்ணாடியிருந்து, தர்ஷனை இன்னொரு முறை அந்த பதிகத்தை பாடச் சொன்னேன். அவரும் பாடினார். நல்லவேளையாக இரண்டாவது தடவை பாட்டு முடிந்தவுடனே, ஓவியாவும் எந்திரிச்சு, என் வயிற்றில் பாலை வார்த்தார். 

அந்த நாடகம் முடிஞ்சவுடனே, ஓவியா, இனிமே எனக்கு பாய் டிரஸ் போட்டீங்கன்னா நான் நாடகத்துலேயே நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இவுங்கக்கிட்டேயிருந்து நான் கத்துக்கிட்ட ஒரு பாடம் என்னன்னா, இந்த மாதிரி குழந்தைகள் நாடகங்களில், குழந்தைகள் கிட்ட முதல்ல அவுங்க கிட்ட இந்த கதாப்பத்திரத்தில நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டுட்டு தான் அவுங்களை நடிக்க வைக்கவே ஆரம்பிக்கிறேன்.   


சனி, 8 பிப்ரவரி, 2014

ஓவியாவின் இரண்டாவது கவிதை மனனப்போட்டி
ஒவ்வொரு வருடமும் ஆஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழ் சங்கம் (ASoGTAustralian Society of Graduate Tamils) என்னும் கழகத்தை சார்ந்தவர்களால் நடத்தப்படும் தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் ஓவியா சென்ற வருடம் பங்கேற்று, கவிதை மனனத்தை செய்தது தான் கீழே உள்ள காணொளி.

நான் ஓவியா, இனியாவிற்காக ஒரு வலைப்பூவை ஆரம்பித்து, நெடு நாட்களாக ஒன்றையும் எழுதாமல் இப்பொழுதாவது தான் எழுத ஆரம்பித்துள்ளேன். இனி அடிக்கடி அவர்களின் ஆக்கங்களையும்அவர்களைப் பற்றைய செய்திகளையும் இந்த வலைப்பூவில் காணலாம்.