செவ்வாய், 8 ஜூலை, 2014

ஓவியாவின் 1$ ஷாப்பிங்





எங்கள் தமிழ் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையும். இதில் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தமிழ் வகுப்பும், கால் மணி நேரம் இடைவேளையும், பிறகு 4.15 மணி முதல் 5 மணி வரை தன்னறிவியல் (self science) வகுப்பும் நடக்கும். இதில் தன்னறிவியல் வகுப்பானது சிறிய குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகள் என்று இரண்டு வகுப்புகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தன்னறிவியல் வகுப்புகளை எங்கள் பள்ளிக்கு அறிமுகப்படுத்தியவர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள். அவர் தான் சிறிய குழந்தைகளின் தன்னறிவியல் வகுப்பை எடுப்பவர். சென்ற வகுப்பில் அவர் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அதாவது, குழந்தைகளிடம் ஒரு டாலரை ($1) கொடுத்து, அவர்களையே தனியாக ஷாப்பிங் செய்ய சொல்ல வேண்டும் என்பது. குழந்தைகள் அந்த ஒரு டாலரில், மிட்டாய் வகையறாக்களை வாங்கக்கூடாது. மேலும் உபயோகமுள்ளவற்றை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்ற வாரமும், இந்த வாரமும் இங்கு குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை. இந்த விடுமுறையில் அவர்கள் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, அடுத்த தன்னறிவியல் வகுப்பில், அவர்கள் என்ன வாங்கினார்கள், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்று சொல்ல வேண்டும்.

ஓவியாவும், ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்து அதை நான் அண்ணா மாமா வகுப்பில் காட்டி சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நானும் இரண்டு நாட்கள் முன்பு, சரி நாம கடைக்கு போகலாம், நீங்க போய் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்யுங்கள் என்று சொன்னேன். உடனே ஓவியா, அப்பா, ஒரு டாலர் கொடுங்கள்” என்று கேட்டார். நானும் கடைக்கு போனவுடனே கொடுக்கிறேன் என்று சொன்னேன். என்னிடம் மணிப்பர்ஸ் இருக்கிறது, அதில் வைத்துக்கொள்கிறேன் என்று கூறினார். நானும் ஒரு டாலரை கொடுத்தவுடன், அந்த மணிப்பர்ஸை திறந்து அதில் போட்டுக்கொண்டார்.





இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இனியா, எனக்கும் காசு கொடுங்கள் என்று கேட்டார். நல்லவேளை, அதே மாதிரி மணிப்பர்ஸ் வேண்டும் என்று கேட்கவில்லை. இனியவ்வின் பாக்கெட்டில் ஒரு டாலரை போட்டுவிட்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு எங்கள் ஊரில் (இங்கில்பர்ன்) ஷாப்பிங்க்கு போனோம். அங்கே ஒரு கடையை மூடுவதால்,closing down sale” என்று போட்டு வெளியில் எல்லாம் ஒரு டாலர், இரண்டு டாலர் வெளியில் வைத்திருந்தார்கள்.







ஓவியாவிடம், இதிலில் ஒரு டாலருக்கு என்ன வேண்டும் என்று பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் கையில் மணிபர்ஸை வைத்துக்கொண்டு, அந்த இடத்தையே சுற்றிக்கொண்டு வந்தார். ஒரு டாலருக்கு அதிகமாக உள்ள பொருட்கள காமிச்சு, இது எத்தனை டாலர் என்று கேட்க, நானும் அந்த பொருட்களுக்கு கீழே ஒட்டியுள்ள விலைப்பட்டியலை காமித்து சொன்னவுடன், ஒரு டாலர் உள்ள பொருட்களிடம் சென்று பார்த்து, ஒரு பென்சில் கேஸ், இரண்டு பென்சில், மூன்று குட்டி அழிப்பான்கள் (ரப்பர்) எல்லாம் செட்டாக ஒரு டாலர் என்று போட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டார். மீண்டும் அந்த இடத்தை சுற்றிப்பார்க்கும்போது, ஐம்பது சென்ட்க்கு (50 cents) சில பொருட்கள் இருந்தன. அவருக்கு இம்பது சென்ட் ஒரு டாலரை விட பெருசா என்று தெரியவில்லை. அவருக்கு சென்டை (cents), புரிய வைத்தவுடன், அதிலிருந்து ஒரு water spray பொருளையும் எடுத்துக்கொண்டு, எனக்கு இந்த இரண்டில் எதை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை, நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்.


நானும், வாங்குவது நீங்கள் தான், அதனால் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னேன். சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்து விட்டு, அந்த பென்சில் செட்டை வைத்துவிட்டு, இந்த water sprayயை எடுத்துக்கொண்டார். எதனால் இதை எடுத்துக்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, இதை வைத்து நான் செடிக்கு தண்ணி ஊற்றுவேன். மேலும் இது 50 சென்ட் தான் என்று கூறினார்.



இதில் இனியா, ஆரம்பத்துலேயே அந்த water spray கையில் எடுத்து வைத்துக்கொண்டார். அவருக்கு அக்கா மாதிரி ஒரு குழப்பமும் வரவில்லை.






சரி, இரண்டு பேரும் அந்த பொருளை எடுத்துக்கொண்டு கடைக்குள் போய் பில் போட்டு வாங்கிக்கிட்டு வாங்க என்று சொன்னேன். இருவரும் உள்ளே சென்று அந்த பொருளை காமித்து, ஒரு டாலரை இருவரும் கொடுத்தார்கள். அந்த பில் போடுகிற பெண்மணி, இருவரிடமும், “உங்களுக்கு 50 சென்ட் திருப்பி வேண்டுமா” என்று கேட்டார். ஓவியா ஆமாம் என்று கூறினார். இனியாவுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை, தாராள பிரபுவாக எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்புறம் 50 செண்டை அவர்கள் திருப்பிக்கொடுத்தவுடன், ஓவியா அதை மணிபர்ஸில் வைத்துக்கொண்டார். இனியா, அதனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஓவியாவிற்கு மகிழ்ச்சி என்றால் அப்படி ஒரு மகிழ்ச்சி. பிறகு வீட்டுக்கு வந்தவுடன், அந்த 50 செண்டை என்னிடம் கொடுத்து, எனக்கு வேறு ஏதாவது வாங்கும்போது இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்.




ஆஹா, பரவாயில்லை, காசின் மதிப்பு தெரிகிறதே என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது.