செவ்வாய், 25 நவம்பர், 2014

ஓவியாவின்பள்ளிக்கூட அனுபவங்கள் – 7 (கல்விச் சுற்றுலா)ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)

இங்கு எல்லா பள்ளிக்கூடங்களிலும் பாலர் வகுப்பிலேயே கல்விச் சுற்றுலாவை ஆரம்பித்து விடுகிறார்கள். ஓவியாவின் பள்ளியில் சென்ற மாதம், பாலர் வகுப்பு குழந்தைகளை மட்டும் இரண்டு பேருந்துகளில் “CALMSLEY HILL FARM” என்ற ஒரு பண்ணைக்கு கல்விச் சுற்றுலாக அழைத்து போயிருக்கிறார்கள்.  அன்றைக்கு காலையில் சரியாக 8.45மணிக்கு பள்ளிக்கு எல்லோரும் வர வேண்டும் என்று சொல்லி, ஒரு பிளாஸ்டிக் பையில் அவர்களுக்கு தேவையான நொறுக்குத் தீனி மற்றும் சாப்பாட்டை கொடுத்து விட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். ஓவியாவிற்கும் அவ்வாறே கொடுத்து 8.45மணிக்கெல்லாம், அம்மணி அவரை பள்ளிக்கு அழைத்து சென்றிருந்தார். அங்கு சரியாக 9மணிக்கு இரண்டு பேருந்துகளில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு அந்த பண்ணைக்கு கிளம்பினார்கள். இரண்டு குழந்தைகளைத் தவிர மற்ற எல்லா குழந்தைகளின் முகத்திலும் அப்படி ஒரு சந்தோஷம். வேண்டுமானால் பெற்றோரும் அவர்களுடன் செல்லலாம். என்ன ஒருவருக்கு $28 கட்ட வேண்டும். அன்றைக்கு மதியம் பள்ளி முடியும் நேரமான மூன்று மணிக்கு சுற்றுலாவை முடித்துவிட்டு பள்ளிக்கு திரும்பிவிட்டார்கள்.


(பேருந்தில் ஏறுவதற்காக செல்லுதல்)(பேருந்துக்குள் அவரவர் விரும்பும் இருக்கைகளில் அமர்தல்)


(ஓவியாவின் சாப்பாட்டுப் பை)

ஓவியாவிடம், நீங்கள் அந்த சுற்றலா சென்று வந்ததை பற்றி ஓரிரு வரிகள் உங்களுக்குத் தெரிந்த படி, ஆங்கிலத்தில் எழுது என்று கூறினோம். அதற்கு அவருடைய கைவண்ணம் தான் கீழே உள்ள படம். அவருக்கு தெரிந்த ஆங்கிலத்தில் எழுதியிருந்தார். முதன்முதலாக இவ்வாறு வாக்கியமாக எழுதியதை, நாங்கள் திருத்த விரும்பவில்லை. அதில் என்ன என்ன தவறுகள் இருக்கிறது என்பதை மட்டும் சுட்டிக்காட்டினோம்.


(முதன் முதலில் வாக்கியமாக எழுதி, அதற்கு ஏற்ற படமும் வரைந்தது. தப்பாக எழுதிவிட்டால், அதன் மேல் ஒரு பெருக்கல் கூறி போட்டு, மேலே சரியானதை எழுத வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள்)


அங்கு சென்று என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை, அவரிடம் கேட்டு, அவரின் பார்வையில் இனி எழுதுகிறேன்.நாங்கள் அந்த பஸ்ஸை விட்டு இறங்கியவுடன், ஒரு லீடர் (Tour Guide) வந்து எங்களை கூட்டிக்கொண்டு போனார்கள். முதலில் ஒரு ஹாலில் உட்கார்ந்து ஸ்நாக்ஸ் சாப்பிட்டோம். அப்புறம் நாங்க முதல்ல birds பார்த்தோம். அதுல parrotsம் இருந்துச்சு. அது “Hello Welcome to Farm” அப்படி பேசும்னு சொன்னாங்க. ஆனா அன்னைக்கு அது பேசலை. இரண்டு Snakes பார்த்தோம். அதுல ஒண்ணு தோல் உரிஞ்சிருந்தது,இன்னொன்னு தோலோட இருந்துச்சு. அப்புறம் நாங்க rabbits, goats எல்லாம் பார்த்தோம். Goatsயை நாங்கள் எல்லாம் தொட்டுப் பார்த்தோம். மாட்டுக்கிட்ட போய், அது பக்கத்துல உட்கார்ந்து, அதோட மடியிலிருந்து பால் கறந்தோம். அது ரொம்ப நல்லா இருந்துச்சு. மரத்து மேல இருந்த kualaவை பெஞ்ச் மேல ஏறி நின்னு பார்த்தோம். அப்புறம் நாங்க ஒரு sheepdog show பார்த்தோம். அந்த நாய் வந்து எல்லா sheepபையும் roundup பண்ணி ஒரு fenceக்குள்ள togetherரா இருக்க வச்சுது. அந்த லீடர் எங்களை அந்த ஹாலுக்கு கூட்டிக்கிட்டு போனாங்க. அங்க நாங்க லஞ்ச் சாப்பிட்டோம். அப்புறம் நாங்க sheepலேருந்து wool எடுக்கிற அந்த showவைப் பார்த்தோம். ஒரு அங்கிள் sheepபை upside downனா பிடிச்சு அதுக்கிட்டேயிருந்து wool எடுத்தாரு. அப்புறம் நாங்க திரும்பி பஸ்ல ஏறி ஸ்கூல்க்கு வந்துட்டோம்.


(இந்த படங்கள் அனைத்தும் - இணையத்திலிருந்து)


இது தான் அவர் என்னிடம் அன்றைக்கு அந்த சுற்றுலாவில் என்ன செய்தார்கள் என்று சொன்னது.
செவ்வாய், 11 நவம்பர், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 6 (பள்ளியில் செய்திகள் வாசிக்கும் நேரம்)                                (படம் உதவி - கூகிள் ஆண்டவர்)ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)


பள்ளிக்கூடத்தில் இப்போது கடைசி பருவம் (last term) நடந்து கொண்டிருக்கிறது. சென்ற பருவத்தில் (3rd term), ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பில் மாணவர்கள் ஒரு நிமிடத்திற்கு குறையாமல் பேச வேண்டும். மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கியிருக்கிறார்கள். ஓவியாவிற்கு செவ்வாய்க்கிழமையாக அமைந்திருந்தது. இதனை "நியூஸ் டைம்(news time)" என்று கூறுகிறார்கள். அந்த பருவம் ஆரம்பித்த முதல்வாரத்தில் இது சம்பந்தமான கடிதத்தை கொடுத்து விட்டார்கள். 

நாம் அவர்களுக்கு உதவி செய்து அவர்களை தயார் படுத்த வேண்டும். ஆனால் ஓவியாவைப் பொறுத்தவரையில்,நாங்கள் ரொம்பவும் கஷ்டப்படவில்லை. அவர்களை யோசிக்க சொல்லி, சிலவற்றை மட்டும் தமிழில் கூறினோம். அதனை அவர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துக்கொண்டு பேசியிருக்கிறார். 

கீழ்கண்ட தலைப்புகளில் ஒவ்வொரு வாரமும் அவர்கள் பேச வேண்டும். 

1. சென்ற விடுமுறையில் நான் என்ன செய்தேன்.
2. எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம்
3. எனக்கு மிகவும் பிடித்த பொம்மை
4. என்னுடைய தோட்டத்திலிருந்து ஏதாவது ஒன்றை பற்றி பேசுதல்
5. பிற்காலத்தில் நான் என்னவாக வர விரும்புகிறேன் 
6. தாய்,தந்தை,தாத்தா,பாட்டி போன்றவர்களை பேட்டி காணுதல் - அவர்கள்      
   பெரியவர்களாக   ஆகும்   போது என்னவாக வர வேண்டும் என்று   
   விரும்பினார்கள்
7. நான் வீட்டில் எவ்வாறு உதவி செய்வேன் 
8. பெற்றோர்கள் குழந்தையாக இருக்கும்போது, அவர்களுக்கு மிகவும் பிடித்த 
   விளையாட்டு பொம்மை
9. இனி வரும் விடுமுறையில் நான் என்ன செய்வேன்


முதல் இரண்டு வாரமும், வீட்டு அம்மணி தான் அந்த தலைப்புகளை சொல்லி அவரை பேச வைத்து பார்த்திருக்கிறார். மூன்றாவது வாரத்தில் தான், நீ எப்படி வகுப்பில் பேசுவாய், அது மாதிரி பேசிக்காட்டு என்று கூறி, அதனை காணொளியாக எடுத்தேன். அந்த காணொளி தான் கீழே உள்ள காணொளி. 
பாலர் வகுப்புகளிலேயே, வெறும் படிப்பதோடு மட்டுமல்லாமல் இம்மாதிரியான ஒரு நிகழ்வை ஏற்படுத்தி, மாணவர்களின் கற்பனைத் திறனையும், பல பேருக்கு முன்பு தைரியமாக நின்று பேசும் திறனையும் வளர்ப்பது என்பது மிக பெரிய விஷயம். 

இம்மாதிரியான ஒரு நடைமுறையை நம்மூரில் நான் படிக்கின்ற காலத்தில் ஏற்படுத்தியிருந்தால், ஒரு வேளை நான் மேடை பேச்சாளராகி இருப்பேனோ, என்னவோ!!!!

செவ்வாய், 7 அக்டோபர், 2014

ஓவியா பங்கேற்ற 2014 - தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளின் காணொளிகள்

 
 


கடந்த 20 வருடங்களாக ஆஸ்திரேலியாவில், "ஆஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் தமிழர் சங்கம்" தமிழ் ஊக்குவிப்பு போட்டிகளை நடத்திவருகிறது.  இந்த போட்டிகள் பற்றிய ஒரு கண்ணோட்டத்தை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
 
இந்த போட்டிகளில், மூன்றாண்டுகளாக ஓவியா பங்கேற்று வருகிறார். இந்த வருடம், அவர் வயதிற்குட்பட்டோர் (5-6வயது) போட்டிகளில் இரண்டு போட்டிகளிலிலும் ("கவிதை மனன போட்டி" மற்றும் "வாய்மொழித்தொடர்பாற்றல் போட்டி"), மேலும் 12 வயதிற்கு மேற்பட்டோர் போட்டியிலும்("தனி நடிப்பு போட்டி") கலந்து கொண்டிருந்தார். அவைகளின் காணொளிகளே இந்த பதிவு.
 
 
 
கவிதை மனன போட்டி:
 
 
 
 
இந்த போட்டியில், முதல் பரிசு, Aநிலை, Bநிலை, Cநிலை மற்றும்  பங்குபெற்றோற்கான நிலை ஆகிய நிலைகளில் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
 
இதில் ஓவியா Bநிலைக்கான பரிசை பெற்றார்.

 
 
 
வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டி: 
 
 
இந்த காணொளி முழுவதுமான காணொளி கிடையாது. கடைசி 40 வினாடிகளின் காணொளியாகும். இந்த போட்டி ஏறக்குறைய 7 மணித்துளிகள் அளவு நடந்தது, இதில் குழந்தைகள் எந்த அளவிற்கு ஆங்கிலம் கலக்காமல் தமிழில் உரையாடுகிறார்கள் என்று பார்க்கப்படுகிறது.
 
இதில் ஓவியா Aநிலைக்கான பரிசை பெற்றார்
 
 

 

 
 
 
 
தனி நடிப்பு போட்டி:
 
12 வயதிற்கு மேற்பட்டோர்க்காக இந்த போட்டி நடத்தப்பட்டது. "ஊக்கமது கைவிடேல்" என்ற கருப்பொருளில், போட்டியாளர்கள் 3மணித்துளி முதல் 5மணித்துளி வரை நடித்துக்காட்ட வேண்டும்.
 
நான் போட்டி நடத்துபவர்களிடம், ஐந்து வயது குழந்தை இப்போட்டியில்  கலந்து கொள்ளலாமா என்று கேட்டேன். அவர்களும் தாராளமாக கலந்து கொள்ளலாம். ஆனால் அவர்கள் வயதில் மூத்தோர்களுடன் போட்டியிட வேண்டும் என்று கூறினார்கள். நானும் எங்களுக்கு பரிசு முக்கியமில்லை. இதில் பங்குபெறுவதை ஒரு அனுபவமாகத்தான் நினைக்கிறோம் என்று கூறி,ஓவியாவை நான்கு நாட்களுக்கு முன்பிருந்து தான் தயார் செய்ய ஆரம்பித்தோம்.
 
ஏற்கனவே நான் நெறிப்படுத்திய நிறைய நாடகங்களில் ஓவியா பங்குப்பெற்றிருந்ததால், அவருக்கு ஒன்றும் சிரமமாக இல்லை. அதிலும் இதில் அவருக்கு இரட்டை வேடம். வீட்டில்  அவர் பயிற்சி செய்யும்போதெல்லாம், இரு வேடங்களுக்கும் குரலை மாற்றி வித்தியாசப்படுத்தி பயிற்சி செய்தார்.
 
இந்த போட்டிக்கு மொத்தம் 8 பேர் பெயர் கொடுத்து, போட்டியன்று 4 பேர் மட்டும் வந்திருந்தார்கள். இவருடைய இலக்கம் மூன்று ஆனால் முதல் இரண்டு போட்டியாளர்கள் வராததால், இவர் தான் முதலில் நடித்துக்காட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. அதிலேயே சிறிது டென்ஷன் ஆகிவிட்டார். பிறகு குரல் மற்ற வேண்டிய இடத்தில் அவரால் சரியாக குரலை மற்ற முடியவில்லை. அவ்வளவுதான் முழுவதும் டென்ஷன் ஆகி, அழுகை தொண்டை வரை முட்ட ஆரம்பித்துவிட்டது. நாங்களும் சரி, இவர் செய்ய மாட்டார், அழுது கொண்டு வந்துவிடுவார் என்று தான் எண்ணினோம். ஆனால், சமாளித்து நடிக்க ஆரம்பித்தார், அதில் சில இடங்களில் வசனங்களை மறந்துவிட்டார். நாங்கள் 3/4 இடங்களில் எடுத்து கொடுத்தோம். பிறகு முழுவதுமாக முடித்துவிட்டு தான் வந்தார்.
 
தான் செய்த அந்த முயற்சிக்கு பலனாக அவருக்கு மூன்றாவது பரிசு கிடைத்தது. இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால், முதல் பரிசையும் எங்கள் பள்ளி மாணவர் தான் பெற்றார். ஆக முதல் பரிசு மற்றும் மூன்றாவது பரிசும் எங்கள் பள்ளிக்கு கிடைத்ததில் எனக்கு இரட்டடிப்பு மகிழ்ச்சி.

 
 

 
 
 
 
 
 இனியாவின் பங்களிப்பு:

இனியா வயதுக்கு 8வரிகளில் ஒரு கவிதையை மனனம் செய்து ஒப்புவிக்க வேண்டும். வீட்டில் அவரும் அழகாக சொல்லிக்காண்பித்தார்.  போட்டியில் போய் சொல்லவேண்டும் என்று கூறினால், "நான் சொல்ல மாட்டேன்" என்று பிடிவாதமாக கூறிவந்தார். சரி, போட்டியில் மற்ற குழந்தைகள் சொல்வதை பார்த்து அவரும் சொல்லிவிடுவார் என்று தான் நம்பினோம். ஆனால் அங்கும் நான் சொல்ல மாட்டேன் என்று கூறி, அழுது ஆர்பாட்டம் பண்ணிவிட்டார். அதே போல் வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டியிலும் ஒரு வார்த்தை கூட அவர் வாயிலிருந்து வரவில்லை.
 
அவருடைய அதிர்ஷ்டம், அவருக்கு பங்குபெற்றோர் நிலைக்கான பரிசு கிடைத்து விட்டது. இதில் கொடுமை என்னவென்றால், இரு பரிசுகளையும் வாங்கிவிட்டு, அக்கா மாதிரி எனக்கு ஏன் இன்னொரு பரிசு கிடைக்கலை என்று கேட்டது தான்.
 
 
 

திங்கள், 11 ஆகஸ்ட், 2014

Why Speak Tamil

 
 
நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடியேறிய பிறகு, இங்கிருக்கும் நண்பர்கள் எல்லாம், “நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் உரையாடாதீர்கள், தமிழிலேயே உரையாடுங்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு தாங்களாகவே ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், நம்முடைய ஆக்ஸெண்ட், இங்குள்ளவர்களின் ஆக்ஸெண்டிலிருந்து வேறுபடும். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படும் என்பது தான். நாங்களும் இந்த முறையையே பின்பற்ற ஆரம்பித்தோம். வீட்டில் இப்பவும் தமிழில் தான் குழந்தைகளிடம் உரையாடி வருகிறோம். ஓவியாவிற்கு நான்கு வயது வரை ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. தமிழில் தான் சரளமாக பேசுவார். இந்தியாவிற்கு சென்றபொழுது, அங்குள்ளவர்களுக்கு, அவர் தமிழில் உரையாடுவதை கண்டு ரொம்ப ஆச்சிரியம். இப்பொழுது அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, வீட்டில் எங்களிடம் அவர் அறியாமல் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிடுவார், நாங்களோ, நீ தமிழில் பேசினால் தான் நாங்கள் பதில் கூறுவோம் என்று சொல்லியிருப்பதால், ஆங்கிலத்தில் பேசிவிட்டு, உடனே அதனை தமிழாக்கம் செய்து விடுவார். அதனால் அவரைப் பொறுத்தவரை எங்களுக்கு பிரச்சனை இல்லை.
ஓவியா இரண்டு வயதிற்குள்ளாகவே பேச ஆரம்பித்துவிட்டார். ஆனால் இனியாவோ கொஞ்சம் தாமதமாகத்தான் பேச ஆரம்பித்தார். அதுவும் வாக்கியமாக இல்லாமல் வார்த்தைகளாகத் தான் பேச ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்திலிருந்தே அம்மாவுடனே இருப்பார், அதனால் பழக்கம் வர வேண்டும் என்பதற்காக, இரண்டரை வயதிலேயே அவரை இங்குள்ள டேகேருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அனுப்ப ஆரம்பித்தோம். மற்ற குழந்தைகளோடு பழக வேண்டும் என்ற நோக்கத்தில் அனுப்பினால், அங்கு அவர் ஆங்கிலத்தை வெகு விரைவாக கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார். இதனால் அவருக்கு தமிழில் பேசுவதைக்காட்டிலும், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எளிதாகிவிட்டது. நாங்கள் என்னத்தான் அவரிடம் தமிழில் பேசினாலும், அவரால் ஆங்கிலத்தில் தான் பேச முடிகிறது. தமிழில் பேசுங்கள் என்று கூறினால், ஆங்கிலத்தில் வாக்கியமாக பேசியதையே, தமிழில் வார்த்தைகளாக பேசுவார். இதில் கொடுமை என்னவென்றால், அக்காவும் தங்கையும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது தான். ஓவியாவிடம், இனியாக்கிட்ட தமிழில் பேசுங்கள் என்று கூறினால், அவளுக்கு தமிழ் தெரியாதுப்பா என்று கூறிவிடுகிறார்.
 
எனக்கு குழந்தைகள் மம்மி, டாடி என்று கூப்பிட்டால் சுத்தமாக பிடிக்காது. அதனால் இருவரும் எங்களை அப்பா, அம்மா என்று தான் கூப்பிடுவார்கள். ஓவியாவிற்கு, தன்னோட ஃபிரண்ட்ஸ் எல்லோரும் மம்மி டாடி என்று தான் கூப்பிடுகிறார்கள், ஏன் தான் கூப்பிடக்கூடாது என்று பெரிய சந்தேகம். அவர்கள் மொழியில் அப்படி கூப்பிடுகிறார்கள், நம் மொழியில், அம்மா, அப்பா என்று தான் கூப்பிடவேண்டும் என்று புரிய வைத்தோம். இனியாவிற்கும் தெரியும், அவ்வாறு கூப்பிடக்கூடாது என்று. வேண்டும் என்றே எங்களை சீண்டுவதற்காக, மம்மி, டாடி என்று கூப்பிட்டுக்கொண்டே இருப்பார். நாங்கள் திரும்ப மாட்டோம். உடனே, பக்கத்தில் வந்து,முகத்தைப் பார்த்து டாடி என்று நக்கலாக சிரித்துக்கொண்டே கூப்பிடுவார். என்னிடமிருந்து பதில் வரவில்லையென்றவுடனே, அப்பா என்று கூப்பிட ஆரம்பித்துவிடுவார்.
 இரு நாட்களுக்கு முன்பு, இனியா என்னிடம் ஆங்கிலத்தில் வாயை மூடாமல் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார். கடுப்பாகிப்போன நான், நீ முதல்ல தமிழ்ல பேசு என்று சொன்னேன்.
    
உடனே, அவர் Why Speak Tamil” ப்பா என்று ஒரு கேள்வியை கேட்டார். நான் ஒரு நிமிடம் ஒன்றும் பேசத்தெரியாமல் அப்படியே நின்றுவிட்டேன். பிறகு சுதாரிச்சு, அப்பாவுக்கு இங்கிலீஷ் தெரியாதுடா, அதனால நீங்க தமிழ்லேயே பேசுங்க என்றேன். உடனே, அவர் ஓவியாவிடம், “அப்பா doesn’t know Englishக்கா” என்று சொன்னார். அதற்கு ஓவியா, “இனியா , அப்பா knows English” என்று கூற, உடனே, இவர் நோக்கா, அப்பா doesn’t know என்று மாறி மாறி கூற, எனக்கு englsih தெரியுமா,தெரியாதான்னு  ஒரு பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
 
 

(இப்படி இருக்கும் குழந்தை தமிழ் அதிகம் பேசாது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இந்த வருடம் நடைபெற்ற சேக்கிழார் விழா நாடகத்தில் முதன்முறையாக இனியாவும் மேடையேறி வசனம் பேசாமல் நடித்தார்கள். அதை பற்றிய பதிவு பிறகு எழுதுகிறேன்)
 
நான் மனதுக்குள்,“வா மகளே வாWhy Speak Tamil ப்பான்னா” கேக்குற, அடுத்த வருஷம் தமிழ் பள்ளியில் சேர்க்கிறேன், அதுக்கு பதில் அப்பத்தெரியும் உனக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

செவ்வாய், 5 ஆகஸ்ட், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 5 (3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs) கதை)

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)
ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 4 (பள்ளியில் கிடைத்த வெகுமதிகள்)


சென்ற வாரம் பள்ளிக்கூடத்தில், 3 லிட்டில் பிக்ஸ் (3 little pigs)  என்ற இந்த கதையை ஒரு வெள்ளைத்தாளில் வரைந்து கொடுத்திருக்கிறார்கள். அதனை மாணவர்கள் கலர் பண்ணி, பிறகு வெட்டி கதையாக சொல்லியிருக்கிறார்கள்.

ஓவியா, வீட்டில் எங்களுக்கு அந்த கதையை சொல்லிக்காட்டினார். அந்த காணொளியை நீங்களும் பாருங்களேன்.

செவ்வாய், 8 ஜூலை, 2014

ஓவியாவின் 1$ ஷாப்பிங்

எங்கள் தமிழ் பள்ளியானது ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மதியம் இரண்டு மணிக்கு ஆரம்பித்து ஐந்து மணிக்கு முடிவடையும். இதில் இரண்டு மணி முதல் நான்கு மணி வரை தமிழ் வகுப்பும், கால் மணி நேரம் இடைவேளையும், பிறகு 4.15 மணி முதல் 5 மணி வரை தன்னறிவியல் (self science) வகுப்பும் நடக்கும். இதில் தன்னறிவியல் வகுப்பானது சிறிய குழந்தைகள் மற்றும் பெரிய குழந்தைகள் என்று இரண்டு வகுப்புகளாக பிரித்து நடத்தப்படுகிறது. இந்த தன்னறிவியல் வகுப்புகளை எங்கள் பள்ளிக்கு அறிமுகப்படுத்தியவர் திரு. அண்ணா சுந்தரம் அவர்கள். அவர் தான் சிறிய குழந்தைகளின் தன்னறிவியல் வகுப்பை எடுப்பவர். சென்ற வகுப்பில் அவர் ஒரு வீட்டுப்பாடம் கொடுத்திருந்தார். அதாவது, குழந்தைகளிடம் ஒரு டாலரை ($1) கொடுத்து, அவர்களையே தனியாக ஷாப்பிங் செய்ய சொல்ல வேண்டும் என்பது. குழந்தைகள் அந்த ஒரு டாலரில், மிட்டாய் வகையறாக்களை வாங்கக்கூடாது. மேலும் உபயோகமுள்ளவற்றை மட்டும் தான் வாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். சென்ற வாரமும், இந்த வாரமும் இங்கு குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறை. இந்த விடுமுறையில் அவர்கள் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்துவிட்டு, அடுத்த தன்னறிவியல் வகுப்பில், அவர்கள் என்ன வாங்கினார்கள், அது யாருக்கு, எதற்கு பயன்படும் என்று சொல்ல வேண்டும்.

ஓவியாவும், ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்து அதை நான் அண்ணா மாமா வகுப்பில் காட்டி சொல்ல வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தார். நானும் இரண்டு நாட்கள் முன்பு, சரி நாம கடைக்கு போகலாம், நீங்க போய் ஒரு டாலருக்கு ஷாப்பிங் செய்யுங்கள் என்று சொன்னேன். உடனே ஓவியா, அப்பா, ஒரு டாலர் கொடுங்கள்” என்று கேட்டார். நானும் கடைக்கு போனவுடனே கொடுக்கிறேன் என்று சொன்னேன். என்னிடம் மணிப்பர்ஸ் இருக்கிறது, அதில் வைத்துக்கொள்கிறேன் என்று கூறினார். நானும் ஒரு டாலரை கொடுத்தவுடன், அந்த மணிப்பர்ஸை திறந்து அதில் போட்டுக்கொண்டார்.

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த இனியா, எனக்கும் காசு கொடுங்கள் என்று கேட்டார். நல்லவேளை, அதே மாதிரி மணிப்பர்ஸ் வேண்டும் என்று கேட்கவில்லை. இனியவ்வின் பாக்கெட்டில் ஒரு டாலரை போட்டுவிட்டு, இருவரையும் அழைத்துக்கொண்டு எங்கள் ஊரில் (இங்கில்பர்ன்) ஷாப்பிங்க்கு போனோம். அங்கே ஒரு கடையை மூடுவதால்,closing down sale” என்று போட்டு வெளியில் எல்லாம் ஒரு டாலர், இரண்டு டாலர் வெளியில் வைத்திருந்தார்கள்.ஓவியாவிடம், இதிலில் ஒரு டாலருக்கு என்ன வேண்டும் என்று பார்த்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொன்னேன். அவரும் கையில் மணிபர்ஸை வைத்துக்கொண்டு, அந்த இடத்தையே சுற்றிக்கொண்டு வந்தார். ஒரு டாலருக்கு அதிகமாக உள்ள பொருட்கள காமிச்சு, இது எத்தனை டாலர் என்று கேட்க, நானும் அந்த பொருட்களுக்கு கீழே ஒட்டியுள்ள விலைப்பட்டியலை காமித்து சொன்னவுடன், ஒரு டாலர் உள்ள பொருட்களிடம் சென்று பார்த்து, ஒரு பென்சில் கேஸ், இரண்டு பென்சில், மூன்று குட்டி அழிப்பான்கள் (ரப்பர்) எல்லாம் செட்டாக ஒரு டாலர் என்று போட்டிருந்தது. அதனை எடுத்துக்கொண்டார். மீண்டும் அந்த இடத்தை சுற்றிப்பார்க்கும்போது, ஐம்பது சென்ட்க்கு (50 cents) சில பொருட்கள் இருந்தன. அவருக்கு இம்பது சென்ட் ஒரு டாலரை விட பெருசா என்று தெரியவில்லை. அவருக்கு சென்டை (cents), புரிய வைத்தவுடன், அதிலிருந்து ஒரு water spray பொருளையும் எடுத்துக்கொண்டு, எனக்கு இந்த இரண்டில் எதை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை, நீங்கள் உதவுங்கள் என்று கூறினார்.


நானும், வாங்குவது நீங்கள் தான், அதனால் நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும் என்று சொன்னேன். சிறிது நேரம் யோசித்துக்கொண்டிருந்து விட்டு, அந்த பென்சில் செட்டை வைத்துவிட்டு, இந்த water sprayயை எடுத்துக்கொண்டார். எதனால் இதை எடுத்துக்கொண்டீர்கள் என்று கேட்டதற்கு, இதை வைத்து நான் செடிக்கு தண்ணி ஊற்றுவேன். மேலும் இது 50 சென்ட் தான் என்று கூறினார்.இதில் இனியா, ஆரம்பத்துலேயே அந்த water spray கையில் எடுத்து வைத்துக்கொண்டார். அவருக்கு அக்கா மாதிரி ஒரு குழப்பமும் வரவில்லை.


சரி, இரண்டு பேரும் அந்த பொருளை எடுத்துக்கொண்டு கடைக்குள் போய் பில் போட்டு வாங்கிக்கிட்டு வாங்க என்று சொன்னேன். இருவரும் உள்ளே சென்று அந்த பொருளை காமித்து, ஒரு டாலரை இருவரும் கொடுத்தார்கள். அந்த பில் போடுகிற பெண்மணி, இருவரிடமும், “உங்களுக்கு 50 சென்ட் திருப்பி வேண்டுமா” என்று கேட்டார். ஓவியா ஆமாம் என்று கூறினார். இனியாவுக்கு என்ன புரிந்தது என்று தெரியவில்லை, தாராள பிரபுவாக எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அப்புறம் 50 செண்டை அவர்கள் திருப்பிக்கொடுத்தவுடன், ஓவியா அதை மணிபர்ஸில் வைத்துக்கொண்டார். இனியா, அதனை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியே வந்தார்கள். ஓவியாவிற்கு மகிழ்ச்சி என்றால் அப்படி ஒரு மகிழ்ச்சி. பிறகு வீட்டுக்கு வந்தவுடன், அந்த 50 செண்டை என்னிடம் கொடுத்து, எனக்கு வேறு ஏதாவது வாங்கும்போது இதை பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
ஆஹா, பரவாயில்லை, காசின் மதிப்பு தெரிகிறதே என்று எனக்கு சந்தோஷமாக இருந்தது.

ஞாயிறு, 15 ஜூன், 2014

இனியாவிற்கு இன்று நான்கு வயது ஆரம்பம் ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு????எங்களின் இரண்டாவது மகாரணி இனியாவிற்கு இன்று தான் மூன்று வயது முடிவடைந்து நான்கு வயது ஆரம்பமாகிறது. ஆனால் அவர் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை. வீடு முழுக்க உள்ள சுவற்றில் தன் கைவண்ணத்தை காட்டியிருக்கிறார் (கையில் பேனா கிடைத்தால் அது எழுதுகிறதா என்று சோதனை செய்வதே சுவற்றில் தான்). போதாக்குறைக்கு சோபாவிலும் அவருடைய கைவண்ணம் தெரியும். உங்களுக்கு எல்லாம் தண்ணீர் குடித்தால் வாந்தி வருமா என்று எனக்கு தெரியாது, ஆனால் அவருக்கு தண்ணீர் குடித்தால் வாந்தி வருமாம். அதைத்தான் இந்த பதிவில் சொல்லியிருந்தேன்.  தண்ணி குடித்தால் வாந்தி வரும் சரி, இன்றைக்கு பிறந்த நாளாக இருக்கிறதே, தலைக்கு குளிப்பாட்டுவோம் என்று தலைக்கு தண்ணீர் ஊற்றப்போனால், தலை குளிக்க வேணாம், சளி பிடிக்கும்னு” வேற சொல்றாங்க.

ஒரு நாள், ஓவியா சோபாவிற்கு கீழே உட்கார்ந்து என்னமோ செய்து கொண்டிருந்திருக்கிறார்கள், அப்போது இவுங்க சோபாவில் உட்கார்ந்து, காலை எடுத்து ஓவியாவின் தலை மேல் வைத்து, ஓவியாவை டிஸ்டர்ப் செஞ்சிக்கிட்டு இருந்திருக்காங்க. இதைப் பார்த்துக்கிட்டு இருந்த அம்மணிக்கு சரியான கோபம். உடனே, இனியாவிடம், உன் காலை எதுக்கு அக்கா தலை மேல வைக்கிற, பேசாம உன் தலை மேல் வச்சுக்கோன்னு சொல்லியிருக்காங்க, அதுக்கு இனியாவோட பதில் எப்படி இருந்துச்சுன்னா...


 (சோபாவில உள்ள கிறுக்கல்கள் எல்லாம் அவுங்களோட கைவண்ணம்) 

பிறந்த நாள் அதுவுமா, அவுங்களைப் பற்றி குறையே சொல்லிக்கிட்டு இருந்தால் நல்லா இருக்காது, அதனால், அவுங்களோட இன்றைய பிறந்த நாள் எப்படி இருந்துச்சுன்னு சொல்றேன்.

அவுங்க காலையில எந்திரிச்சவுடனே, ஓவியா அக்கா அவுங்களுக்காக ஒரு பேப்பர்ல வாழ்த்துச் செய்தி எழுதி அவுங்க கிட்ட கொடுத்தாங்க. சியாந்திரம் முருகன் கோவில்ல சேக்கிழார் விழா நிகழ்ச்சியில ஓவியாயும் முதல் முறையா இனியாவும் கலந்துக்கிற நாடகம் இருந்ததுனால, அப்பப் போய் சாமி கும்பிட்டுக்காலம்னு காலையில கோயிலுக்கு போகலை.மதியம் கேக் வாங்கிவந்து அதை இனியா கட் பண்ணி எல்லோருக்கும் ஊட்டி விட்டாங்க.

சியாந்திரம் நான் எழுதிய “சைவ நீதி” என்னும் நாடகத்தை, எங்கள் தமிழ் பள்ளி மாணவர்கள் சிட்னி முருகன் கோவிலில், சேக்கிழார் விழா நிகழ்ச்சியில் மேடை ஏற்றினார்கள். அதில் இனியாவும் மேடையேறினார். எங்களுக்கு, அவருடைய பிறந்த நாள் அதுவுமாக கோவிலில் மேடை ஏறியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு வசனம் எதுவும் இல்லை, ஆனால் எங்களின் உதவி இல்லாமல் அவர் மேடை ஏறியது தான் மிகுந்த ஆச்சிரியம். 

இப்படியாக அவரின் மூன்றாவது பிறந்த தினம் இனிதாக நிறைவடைந்தது.

அந்த நாடகத்தைப் பற்றிய பதிவை விரைவில் வெளியிடுகிறேன்.