திங்கள், 11 ஆகஸ்ட், 2014

Why Speak Tamil

 
 
நாங்கள் ஆஸ்திரேலியாவிற்கு குடியேறிய பிறகு, இங்கிருக்கும் நண்பர்கள் எல்லாம், “நீங்கள் உங்கள் குழந்தைகளிடம் ஆங்கிலத்தில் உரையாடாதீர்கள், தமிழிலேயே உரையாடுங்கள். அவர்கள் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்த பிறகு தாங்களாகவே ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்துவிடுவார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், நம்முடைய ஆக்ஸெண்ட், இங்குள்ளவர்களின் ஆக்ஸெண்டிலிருந்து வேறுபடும். இதனால் குழந்தைகளுக்கு குழப்பம் ஏற்படும் என்பது தான். நாங்களும் இந்த முறையையே பின்பற்ற ஆரம்பித்தோம். வீட்டில் இப்பவும் தமிழில் தான் குழந்தைகளிடம் உரையாடி வருகிறோம். ஓவியாவிற்கு நான்கு வயது வரை ஆங்கிலம் அவ்வளவாக தெரியாது. தமிழில் தான் சரளமாக பேசுவார். இந்தியாவிற்கு சென்றபொழுது, அங்குள்ளவர்களுக்கு, அவர் தமிழில் உரையாடுவதை கண்டு ரொம்ப ஆச்சிரியம். இப்பொழுது அவர் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த பிறகு, வீட்டில் எங்களிடம் அவர் அறியாமல் ஆங்கிலம் பேச ஆரம்பித்துவிடுவார், நாங்களோ, நீ தமிழில் பேசினால் தான் நாங்கள் பதில் கூறுவோம் என்று சொல்லியிருப்பதால், ஆங்கிலத்தில் பேசிவிட்டு, உடனே அதனை தமிழாக்கம் செய்து விடுவார். அதனால் அவரைப் பொறுத்தவரை எங்களுக்கு பிரச்சனை இல்லை.
ஓவியா இரண்டு வயதிற்குள்ளாகவே பேச ஆரம்பித்துவிட்டார். ஆனால் இனியாவோ கொஞ்சம் தாமதமாகத்தான் பேச ஆரம்பித்தார். அதுவும் வாக்கியமாக இல்லாமல் வார்த்தைகளாகத் தான் பேச ஆரம்பித்தார். அவர் ஆரம்பத்திலிருந்தே அம்மாவுடனே இருப்பார், அதனால் பழக்கம் வர வேண்டும் என்பதற்காக, இரண்டரை வயதிலேயே அவரை இங்குள்ள டேகேருக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் அனுப்ப ஆரம்பித்தோம். மற்ற குழந்தைகளோடு பழக வேண்டும் என்ற நோக்கத்தில் அனுப்பினால், அங்கு அவர் ஆங்கிலத்தை வெகு விரைவாக கற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார். இதனால் அவருக்கு தமிழில் பேசுவதைக்காட்டிலும், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவது எளிதாகிவிட்டது. நாங்கள் என்னத்தான் அவரிடம் தமிழில் பேசினாலும், அவரால் ஆங்கிலத்தில் தான் பேச முடிகிறது. தமிழில் பேசுங்கள் என்று கூறினால், ஆங்கிலத்தில் வாக்கியமாக பேசியதையே, தமிழில் வார்த்தைகளாக பேசுவார். இதில் கொடுமை என்னவென்றால், அக்காவும் தங்கையும் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்வது தான். ஓவியாவிடம், இனியாக்கிட்ட தமிழில் பேசுங்கள் என்று கூறினால், அவளுக்கு தமிழ் தெரியாதுப்பா என்று கூறிவிடுகிறார்.
 
எனக்கு குழந்தைகள் மம்மி, டாடி என்று கூப்பிட்டால் சுத்தமாக பிடிக்காது. அதனால் இருவரும் எங்களை அப்பா, அம்மா என்று தான் கூப்பிடுவார்கள். ஓவியாவிற்கு, தன்னோட ஃபிரண்ட்ஸ் எல்லோரும் மம்மி டாடி என்று தான் கூப்பிடுகிறார்கள், ஏன் தான் கூப்பிடக்கூடாது என்று பெரிய சந்தேகம். அவர்கள் மொழியில் அப்படி கூப்பிடுகிறார்கள், நம் மொழியில், அம்மா, அப்பா என்று தான் கூப்பிடவேண்டும் என்று புரிய வைத்தோம். இனியாவிற்கும் தெரியும், அவ்வாறு கூப்பிடக்கூடாது என்று. வேண்டும் என்றே எங்களை சீண்டுவதற்காக, மம்மி, டாடி என்று கூப்பிட்டுக்கொண்டே இருப்பார். நாங்கள் திரும்ப மாட்டோம். உடனே, பக்கத்தில் வந்து,முகத்தைப் பார்த்து டாடி என்று நக்கலாக சிரித்துக்கொண்டே கூப்பிடுவார். என்னிடமிருந்து பதில் வரவில்லையென்றவுடனே, அப்பா என்று கூப்பிட ஆரம்பித்துவிடுவார்.
 இரு நாட்களுக்கு முன்பு, இனியா என்னிடம் ஆங்கிலத்தில் வாயை மூடாமல் ஏதோ கேட்டுக்கொண்டு இருந்தார். கடுப்பாகிப்போன நான், நீ முதல்ல தமிழ்ல பேசு என்று சொன்னேன்.
    
உடனே, அவர் Why Speak Tamil” ப்பா என்று ஒரு கேள்வியை கேட்டார். நான் ஒரு நிமிடம் ஒன்றும் பேசத்தெரியாமல் அப்படியே நின்றுவிட்டேன். பிறகு சுதாரிச்சு, அப்பாவுக்கு இங்கிலீஷ் தெரியாதுடா, அதனால நீங்க தமிழ்லேயே பேசுங்க என்றேன். உடனே, அவர் ஓவியாவிடம், “அப்பா doesn’t know Englishக்கா” என்று சொன்னார். அதற்கு ஓவியா, “இனியா , அப்பா knows English” என்று கூற, உடனே, இவர் நோக்கா, அப்பா doesn’t know என்று மாறி மாறி கூற, எனக்கு englsih தெரியுமா,தெரியாதான்னு  ஒரு பட்டிமன்றமே நடத்த ஆரம்பித்து விட்டார்கள்.
 
 

(இப்படி இருக்கும் குழந்தை தமிழ் அதிகம் பேசாது என்று சொன்னால் நம்ப முடிகிறதா. இந்த வருடம் நடைபெற்ற சேக்கிழார் விழா நாடகத்தில் முதன்முறையாக இனியாவும் மேடையேறி வசனம் பேசாமல் நடித்தார்கள். அதை பற்றிய பதிவு பிறகு எழுதுகிறேன்)
 
நான் மனதுக்குள்,“வா மகளே வாWhy Speak Tamil ப்பான்னா” கேக்குற, அடுத்த வருஷம் தமிழ் பள்ளியில் சேர்க்கிறேன், அதுக்கு பதில் அப்பத்தெரியும் உனக்குன்னு நினைச்சுக்கிட்டேன்.

27 கருத்துகள்:


  1. இங்கு தமிழ்நாட்டில் உள்ளவர்களே ஆங்கிலத்தில் உரையாடும்போது, ஆங்கிலம் பேசுகின்ற நாட்டில் குழந்தை இனியா ஆங்கிலம் பேசுவதை தடுக்க இயலாது. ஆனால் உங்களைப் போல் வெளி நாட்டில் உள்ளவர்கள் வீட்டில் தமிழில் உரையாடி குழந்தைகளையும் தமிழில் பேச வைப்பதை அறியும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. கவலை வேண்டாம். இனியா அடுத்த ஆண்டு தமிழிலேயே பேசி உங்களை அசத்துவார். புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ன?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதலில் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா.
      தங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசியால், இனியா எப்படியும் தமிழ் கற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கை இருக்கிறது ஐயா.

      நீக்கு
  2. வீட்டில் தமிழில் பேச இத்தனை முயற்சி எடுக்கிறீர்கள்.வாழ்த்துக்கள். இனியா உங்கள் நாடக வசனம் பேசி அசத்தப்போகிறாள் பாருங்கள். எப்படி இருந்த இனியா குட்டி இப்படி ஆகிட்டாளேன்னு வியக்கப் போகிறீர்கள். இல்லையா இனியா...?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாக இனியா தாங்கள் நினைப்பது போல், வியக்க வைப்பாள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

      தங்களின் வருகைக்கும், கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  3. வீட்டில் தமிழ் பேசவில்லை என்றால் அடுத்த தலைமுறை தமிழை மறந்து விடும் ,உங்களின் முயற்சியை தொடருங்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னீர்கள். கண்டிப்பாக வீட்டில் தமிழ் பேசினால் தான் அடுத்த தலைமுறையும் அதனை பின்பற்றும்.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பகவான்ஜீ.

      நீக்கு
  4. எனக்கு குழந்தைகள் மம்மி, டாடி என்று கூப்பிட்டால் சுத்தமாக பிடிக்காது. அதனால் இருவரும் எங்களை அப்பா, அம்மா என்று தான் கூப்பிடுவார்கள்.

    நான் ரசித்த வரிகள் வாழ்த்துக்கள் நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தாங்கள் ரசித்ததை கண்டு மிக்க மகிழ்ச்சி.

      தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  5. ஆகா எங்கள் வீட்டுப்பிரச்சனை உங்கள் வீட்டிலுமா. எங்களுக்கும் எங்கள் மகன் தமிழில் ஆரம்பத்தில் மூச்சுவிடாமல் பேசுவார். கிண்டர்கார்டனிலும் போய் தமிழ்தான். பின் படிப்படியா குறைந்து டொச் தான் பேசினார். ஆனால் நான் விடாமல் தமிழ் ஸ்கூலுக்கு விட்டு எழுத,படிக்க சொல்லிக்கொடுத்ததாலும், தமிழ் டிவியில் நல்ல நிகழ்ச்சிகளை பார்க்கவிட்டும்,வீட்டிலும் தமிழிலில் பேசி இப்போ நன்றாக தமிழ் பேசுவார். ஜேர்மன், தமிழ், ஆங்கிலம் மொழி உட்பட பிரெஞ்ச்,ஸ்பானிஷ் தெரியும். சின்னப்பிள்ளைகளுக்கு 4,5 மொழி கற்கும் திறமை இருக்கு என இங்கு சொல்வார்கள். ஆனா நான் இங்கு கண்ட விடயம், எங்கள் தமிழ்பிள்ளைகள் இருவர் சேர்ந்தால் இந்நாட்டுப்பாஷைதான் பேசுகிறார்கள். துருக்கி,ரஷ்யா போன்ற வேறு நாட்டுப்பிள்ளைகள் கூடுதலாக தாய்மொழியே பேசுவார்கள். இது நான் அதிக தடவை கவனித்ததொன்று.
    நிச்சயம் உங்கள் மகள்களும் நன்றாக தமிழ் பேசுவார்கள். வீட்டிலும் தொடர்ந்து முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. இப்படியான நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தினாலும் ஆர்வம் வரும்.அதுவும் உங்ககிட்டேயா!!!!!!
    இருவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வீட்டிலும் இந்த பிரச்சனை இருந்திருக்கிறதா? நான் கேள்விப்பட வரையில் நிறைய பேர் இந்த பிரச்சனையை சந்தித்திருக்கிறார்கள்.

      தங்கள் மகன் தமிழை மறக்காமல் கற்றுக்கொண்டதற்கும், மேலும் மற்ற மொழிகளையும் கற்றுக்கொண்டதற்கு என்னுடைய வாழ்த்துக்களை அவரிடம் தெரிவியுங்கள்.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  6. அய்யா வணக்கம்!
    தங்கள் பிள்ளை தமிழ்படிக்காவிட்டால் அங்கு வேறு எவர் பிள்ளை படிக்கும்?
    பெயர்தான் தமிழ்நாடு!
    இங்கு English பேசினால் தான் இங்குள்ள அப்பா அம்மாக்களுக்கு “ நல்ல ஸ்கூல சேர்த்திருக்கோம் “ என்ற நினைப்பே வருகிறது.
    மொழி என்பது பேசும் வார்த்தையோ கருத்துப் பரிமாற்றமோ மட்டும் அல்ல !

    அது நம் மரபின் அடையாளம்!

    தலைமுறை தலைமுறையாய் நம் பாட்டனும் முப்பாட்டனும் பெருகச் சேர்த்து நமக்கு விட்டுச் சென்றிருக்கும் சொத்து!

    நீங்கள் அதன் அருமை உணர்ந்திருக்கிறீர்கள்!

    உங்கள் பிள்ளைகள் தமிழுக்குத் தங்கள் பங்கை நிச்சயம் சேர்த்து வைக்கும்!

    அதற்கான வரத்தை அளிக்க நீங்கள் உள்ளீர்கள்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகத்தான் சொன்னீர்கள். இன்றைக்கு தமிழ் நாட்டில் நீங்கள் சொல்வது போல் தான் இருக்கிறது.

      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  7. தங்களின் தமிழ் உணர்வு போற்றுதலுக்கு உரியது நண்பரே
    தமிழ் நமது அடையாளம்
    மனம் மகிழ்ச்சியாக இருக்கிறது நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஜெயக்குமார் சார்

      நீக்கு
  8. இங்கு நம் நாட்டில் பெற்றோர் தங்கள் குழந்தைகள் தமிழில் பேசினால் ஏதோ தரக் குறைவு என்று சொல்லுவதும்,தமிழெல்லாம் மொழியா....ஆங்கிலத்தில் பேசு என்று வகுப்புகளுக்கு அனுப்புவதும் நடக்கும் போது அயல் நாட்டில் வசிக்கும் நீங்கள் உங்கள் குழந்தைகள் தமிழ் கற்க முயற்சி எடுப்பது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதுவும் இங்குள்ள குழந்தைகளே மம்மி, டாடி என்று அழைக்கும் போது தாங்கள் அம்மா, அப்பா வலியுறுத்துவது பாராட்டிற்குரியது....இப்படி அழைப்பதில் உள்ள ஆனந்தம் மம்மி டாடியில் இல்லை என்பது உண்மைத் தமிழனுக்கு மட்டுமே தெரியும், உணரவும் முடியும்.

    தங்கள் குழந்தைகள் நிச்சயமாக தமிழில் கலக்கப் போகின்றார்கள் பாருங்கள்! சொக்கன் சார்.

    படத்தில் குழந்தைகள் மிகவும் அழகாக உள்ளார்கள். அவர்களிடம் எங்கள் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள்! மிகவும் ரசித்தோம்....அதுவும் சிவப் பழமாக...பார்க்கவே இதமாக இருக்கின்றது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழந்தை முதன்முதலில் பேச ஆரம்பித்து அம்மா,அப்பா என்று கூப்பிடும்போது எவ்வளவு ஆனந்தம் ஏற்படுகிறது. சில பெற்றோர்கள் மம்மி,டாடி என்று குழந்தைகளை கூப்பிடவைத்து அந்த ஆனந்தத்தை இழந்து விடுகின்றனர்.

      தங்களின் வாழ்த்துக்கு மிக்க நன்றி துளசி சார்.

      நீக்கு
  9. மம்மி டாடி // ஹா ஹா :) என்கப்பாம்மாவுக்கும் பிடிக்காத ஒன்று .என் பொண்ணு mom dad என்று சில நேரம் அழைப்பாள்
    ஆனால் நான் அம்மான்னு அழைக்க கண்டிப்புடன் சொலியிருக்கேன் .
    எங்களுக்கு சைல்ட் ஸ்பெஷலிஸ்ட் ஆரம்பத்திலேயே சொல்லிவிட்டார் /வீட்டில் தாய்மொழி பேசுங்கள் பள்ளியில் அவளே அழகா பல மொழிகளை கற்றுகொள்வானு ..அதனால் என் மகள் நன்கு தமிழில் பேசுவாள் ..
    அப்புறம் நாங்க நம்ம ஊர் தமிழ் தொல்லைகாட்ட்சிகளை பார்ப்பதை தவிர்த்து விட்டோம் .because:).அதை பார்த்து இவளுக்கு இருப்பதும் போயிடும் .:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மகளுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லுங்கள்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி

      நீக்கு
  10. வெளிநாட்டில் வசிப்போர்க்கு இப்பிரச்சனை இருக்கிறது என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
    அம்மா அப்பா என்றுஅழப்பது தான் இனிமை.

    பதிலளிநீக்கு
  11. அருமையான தகவல் தோழர்..
    வாழ்த்துக்கள் நல்ல பதிவு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  12. அட! இந்த பிள்ளைக்கு தமிழ் தெரியாதா? ஆச்சரியமாய் தான் இருக்கு:)
    நல்ல கேள்வி! நல்ல முடிவு! அடுத்தவருடம் இனியாவை போல ஓவியத்ததமிழ் பேசபோகிறாள் நம்ம குட்டி தேவதை!!

    பதிலளிநீக்கு
  13. வலைச்சரத்தில் தங்களைப்பற்றி கிசுகிசு படித்தேன்.

    பதிலளிநீக்கு
  14. வணக்கம்


    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் சென்றுபார்வையிட முகவரி.
    http://blogintamil.blogspot.com/2014/08/blog-post_16.html?showComment=1408144560192#c7901132577909697036

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  15. சகோ நான் நேற்றே கருத்தை எழுதி விட்டு வெளியிடும் போது அழிந்து விட்டது. இன்று திரும்பவும் இடுகிறேன். இந்தப் பிரச்சினை இங்கும் தான் சகோ காலம் கடந்து விட்டது எனக்கு. உங்களுக்கு அப்படி இல்லை மனம் தளராது செயல் படுங்கள் நிச்சயம் அவர்கள் அழகாக பேசுவார்கள் தமிழில் நல்ல திரைப்படங்களையும் பார்க்க விடுவதும் நல்லது தான் என்றே நான் நினைக்கிறன் சகோ வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  16. இனிய தமிழை, இனியா நிச்சயம் விரைவில் பேசுவார் திரு. சொக்கன்.
    என்ன தான் தமிழ் தெரிந்திருந்தாலும் சகோதர சகோதரிகள் ஆங்கிலத்தில் உரையாடுவது இப்பொழுது சகஜமப்பா

    பதிலளிநீக்கு
  17. இது வெளியிட இல்லை நண்பரே! என்னாயிற்று? உங்களை வலைத்தளத்தில் காண வில்லையே? பதிவுகளும் இல்லை? எல்லோரும் நலம்தானே! வேலைப் பளுவோ?!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கரிசனத்துக்கு மிக்க நன்றி துளசி சார்.
      வேலைப் பளு எல்லாம் இல்லை. இரு வாரங்களாக பொது வேலைகள் மற்றும் சிறிது உடல் நிலை சரியில்லாமல் இருந்தததும் தான் வலைத்தளத்திற்கு வர இயலவில்லை.
      அடுத்த வாரத்திலிருந்து நான் வலைத்தளலத்தில் ஆஜர் சார்.

      நீக்கு