புதன், 5 மார்ச், 2014

விஜய் டிவியின் மகாபாரதமும் எங்கள் வீட்டு மகாராணிகளும்






கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சவுடனே, ஓவியா தினமும் இரவு கதை கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் எனக்கு தெரிஞ்ச ஏழெட்டு நீதிக் கதைகளையெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பேன். திருப்பி திருப்பி கேட்ட கதைகளையே கேட்டு கேட்டு அவுங்களுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு, அதனால புது கதை சொல்லுங்க, புது கதை சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு. நானும் இந்தியாவிற்கு போயிட்டு வரும்போது, கொஞ்சம் நீதிக் கதைகள் புக் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்து அதிலேருந்து படிச்சு சொல்லுவேன். இதுல ஒரு நாள் வீட்டு அம்மணி, தன்னோட கற்பனை வளத்தை உபயோகப்படுத்தி, ஒரு கதை சொல்லியிருக்காங்க. அது ஓவியாவிற்கும் சரி, இனியாவிற்கும் சரி ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதற்கு பிறகு அவுங்க ரெண்டு பேரும் என்கிட்ட நீங்க புக் படிச்சு கதை சொல்லாதீங்க, அம்மா சொன்ன மாதிரி, நீங்களே யோசிச்சு சொல்லுங்கன்னு கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் உங்கம்மா மாதிரி எனக்கு யோசிக்க தெரியாது, அதனால அவுங்கக்கிட்டேயே கேட்டுக்குங்கன்னு சொல்லி சமாளிச்சேன். ஆனா ஓவியா, “நான் அம்மாக்கிட்டே கேட்டேன், அதுக்கு அவுங்களுக்கு அந்த ஒரு கதை தான் தெரியுமாம், அப்பாவுக்கு தான் இந்த மாதிரி சொந்தமா நிறைய கதையெல்லாம் தெரியும், நீ அப்பாக்கிட்டேயே கேளுன்னு சொல்லிட்டாங்கப்பான்னு” திருப்பி என்கிட்டேயே வந்து நின்னாங்க. அட கடவுளே! ஒரு நாள் என்னால கதை சொல்ல முடியாம அம்மணியை கதை சொல்ல சொன்னதுக்கு, என்னைய நல்லா பழி வாங்கிட்டாங்களேன்னு நினைச்சுக்கிட்டேன். வீட்டுல தூங்கப்போறதுக்கு முன்னாடி நீதிக்கதைகளை படிச்சவன், மறு நாளையிலிருந்து, அந்த கதை புத்தகத்தை trainல படிச்சுக்கிட்டு, இரவு அவுங்களுக்கு நானா யோசிச்சு சொல்றாமதிரி பில்டப் பண்னினேன். தினமும் இவுங்களுக்காக கதையை தேடித்தேடி படிக்கிறதுனால, என்னோட மத்த கதை புத்தகங்களை படிக்க முடியாம போயிக்கிட்டு இருந்துச்சு. அந்த நேரத்துல தான் ஆபத்வாந்தனாக, விஜய் டிவியில மாகாபாரதம் வர ஆரம்பிச்சுது (ஒரு வழியா தலைப்புக்கு வந்துட்டேனா!!!).


தினமும் நாம இரவு மகாபாரதம் பார்ப்போம், நீங்க படுக்கப்போகும்போது, நான் உங்களுக்கு புரியிர மாதிரி அன்னைக்கு டிவியில வந்த மகாபாரதக்கதையை சொல்றேன்னு ரெண்டு மகாரணிகளோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டேன். எங்க வீட்டுல நாங்க “YUPPTV”யை கனெக்ஷன் கொடுத்திருக்கோம். அதுவும் எனக்கு இதெல்லாம் தெரியாது. ஒரு நண்பர் தன்னோட வீட்டுல விஜய் டி‌வி நிகழ்ச்சி எல்லாம் இணையம் மூலமா டிவியில பார்க்கிறோம்னு சொன்னாரு. உடனே, எங்க வீட்டு அம்மணிக்கு ஆசை வந்துடுச்சு. நம்ம வீட்டிலும் அந்த கனெக்ஷன் கொடுத்தா நானும் பார்ப்பேனேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நம்முடைய இணையம் வழியாக அந்த “YUPPTV” காரங்க, சன்,ஜெயா,விஜய்,ராஜ்,மக்கள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குறாங்க. இதுல ஒரு சிறப்பு அம்சமே, 10 நாள் நிகழ்ச்சிகள் வரை பார்க்க முடியும். அன்றைய நிகழ்ச்சிகளை அன்றைக்கே பார்க்கணும்னு அவசியம் இல்லை. நாங்க முத நாள் நிகழ்ச்சியை மறு நாள் தான் பார்ப்போம். ஓவியாவுக்கும், இனியாவுக்கும் அந்த மகாபாரத நிகழ்சி ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சு. ஆனா, அவுங்களுக்கு, நிகழ்ச்சியில பேசுற தமிழ் புரியாது. ஆதனால தினமும் இரவு, அன்றைக்கு வந்த நிகழ்ச்சியை நான் அவுங்க அளவிற்கு கீழே இறங்கி புரியிர மாதிரி சொல்லுவேன். இதனால எனக்கு புதுசு புதுசா கதை சொல்ற வேலை இல்லாம போயிடுச்சு.

இதை பார்க்க ஆரம்பிச்சதிலிருந்து, வேற ஏதாவது ஒரு படத்துல “வாழ்க”ன்னு வந்தா போதும், உடனே இனியா, மகாபாரத்துல சொல்லுவாங்கன்னு ஆரம்பிச்சுடுவாங்க. அதுவும் கிருஷ்ணன் வருவதற்கு முன்பு, இசை ஒன்று வரும். அது வந்தவுடனே, இனியா கிருஷ்ணர் வரப்போராருன்னு ரன்னிங் காமென்டிரி கொடுத்துடுவாங்க. அதுல வர்ற கதாப்பத்திரங்கள் பேர் எல்லாம் ரெண்டு பேருக்கும் அத்துப்படி. அவுங்களை பொருத்தவரைக்கும் கௌரவர்கள் “BAD BOYS”, பாண்டவர்கள் “GOOD BOYS”. இதுல அவுங்களுக்கு பெரிய சந்தேகம் கர்ணன் “good boyயா, bad boyயான்னு”. அப்புறம் கர்ணன் கதாபாத்திரத்தை புரிய வச்சோம். பாப்பா எல்லாம் அம்மா வயிற்றிலுருந்து வராம எப்படி சாமி கொடுக்கிறாருன்னு பெரிய சந்தேகம். இப்படி அவுங்களுக்கு நிறைய சந்தேகம் தினமும் வரும். அதையெல்லாம் அவுங்க அளவிற்கு இறங்கிப் போய் புரிய வைப்போம். அப்புறம் பீமன் சாப்பிடுறதைப் பார்த்தா அவுங்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு வரும். ரெண்டு,மூணு வாரத்துக்கு முன்னாடி, திரௌபதி, யாகத்தீயிலிருந்து, வந்ததைப் பார்த்த ஓவியா, எப்படி அப்படி வர முடியும், அவுங்களுக்கு சுடாதான்னு ஏகப்பட்ட கேள்விகள். இதுல இனியா, திரௌபதியை பார்த்து, அழகா இருக்காங்கம்மான்னு கமெண்ட். லீவு நாள்ல ஒரு நாள் காலையில மகாபாரதத்தை பார்த்துட்டு, ரெண்டு பேரும், எங்களுக்கு பாவாடை சட்டை தான் வேணும்னு அடம்பிடிச்சு, அப்புறம் பாவாடை சட்டை போட்டு, அவுங்களை மாதிரி செயின், நெத்திச்சூடி எல்லாம் போடணும்னு சொல்லி, அதெல்லாம் போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறதை பாருங்க.



எல்லாத்தைவிட ஒரு ஹைலைட்டான விஷயமே, ஓவியா எங்களிடம் ஒரு கேள்வியை கேட்டது தான். இனியா என்னைய அக்கான்னு கூப்பிடுறா, அது மாதிரி நானும் ஒருத்தவங்களை அக்கான்னு கூப்பிடணும், அதுவும் ஒரு பாப்பா உங்க வயித்துக்குள்ளேருந்து வந்து உடனே என்னைய விட அது பெருசாயிடணும்னு” சொன்னாங்க. நாங்க பாப்பா உடனே எப்படி, உங்களை விட பெருசா ஆவாங்கன்னு கேட்டோம், அதுக்கு அவுங்களோட பதில், “மகாபாரதத்துல பீமன் அண்ணா ஒரு பாப்பாவை தூக்கி சாமிக்கிட்ட வைப்பாங்க, அந்த பாப்பா உடனே பெருசா ஆயிட்டாங்க, அது மாதிரி தான் நான் கேக்கிறதுன்னு” சொன்னாங்க. அப்புறம் அவுங்களுக்கு அதை ஒரு மாதிரி புரிய வச்சோம்.

விஜய் டிவியில வர்ற மகாபாரதம் எந்த அளவிக்கு உண்மைன்னு தெரியலை,  அந்த நிகழ்ச்சியினால சின்ன குழந்தைகளுக்கு நம்மளோட இதிகாசம் தெரியவருது,     அதோட நிறைய நல்ல கருத்துக்களையும் நம்மலாள அவுங்களுக்கு சொல்ல முடியுது.


23 கருத்துகள்:

  1. ஹைலைட்டான விசயம் உட்பட அனைத்து கேள்விகளும் ரசிக்கத்தக்கவை... ஆனால், இன்றைய குழந்தைகள் கேட்கும் பல கேள்விகளுக்கு பதில் நம்மிடம் இல்லை என்பதும் உண்மை...

    மற்ற நிகழ்ச்சிகளை (cartoon, pogo, etc....) தேர்ந்தெடுக்காமல் மகாபாரதத்தை காண வைப்பதற்கு பாராட்டுக்கள்...

    செல்லங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி டிடி.
      உண்மை தான் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதில் தான் இல்லை.

      வாழ்த்துக்களுக்கு நன்றி.

      நீக்கு
  2. அனைத்தும் ரசித்தேன் ! மகிழ்ச்சியாக இருந்தது. வேலைக்கு போய்விட்டு வந்து மிகுதி எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
      வேலைப்பளுவிற்கு இடையில் தாங்கள் படித்து ரசித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
      நன்றி சகோதரி.

      நீக்கு
  3. சின்ன குழந்தைகள் கேட்கும் கேள்விகள் மிகவும் சுவையாக இருக்கும்! நாம் தான் பொறுமையாக சொல்லிக்கொடுக்க வேண்டியிருக்கும். நீங்கள் பொறுமையாக சொல்லிக்கொடுக்கிறீர்கள் என்று தெரிகிறது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சுரேஷ்.

      நீக்கு
  4. குழந்தைகளுக்குத்தான் எத்துனை ஆசை..
    அவர்களின் உலகத்தை எங்களுடன் பகிர்ந்தது மகிழ்வு..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  5. உங்க தலைமையில் இந்த வருடத்தில் ஆஸ்திரேலியாவில் மகாபாரதம் நாடகம் கண்டிப்பாக நடக்கும் என்று தகவல் வந்துள்ளது...அதனால் 3 டிக்கெட் வாங்கி அனுப்பவும்...

    அக்கா வேண்டும் என்று கேட்கும் உங்கள் குழந்தையிடம் அக்கா அமெரிக்காவிற்கு படிக்க போய் இருப்பதாக சொல்லவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ! அந்த செய்தியும் உங்க காதுக்கு எட்டிடுச்சா?? 3டிக்கெட்டை வாங்கி அனுப்புறேன். அதோட என்னோட வங்கி கணக்கையும் சேர்த்து அனுப்புகிறேன். அதுல 3 டிக்கெட்க்கான பணத்தை யு‌எஸ் டாலராக செலுத்திடுங்க (எங்க டாலரை காட்டிலும் உங்க டாலர் தான் அதிகம்)

      ஓவியாவிடம், அக்கா அமெரிக்காவில படிக்கிறாங்கன்னு சொன்னேன். உடனே,அவுங்களை பார்க்கணும்னு சொன்னாங்க. அதனால உங்க 3டிக்கெட் பணத்தோட, எங்க 4 பேரோட டிக்கெட் பணத்தையும் சேர்த்து என் வங்கிக் கணக்குல செலுத்திடுங்க.

      நீக்கு
  6. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சகோதரா! இது தான் சரியான தருணம் தமிழ் பற்றையும் இறை பக்தியையும் இயன்றவரை ஊட்டி விடுங்கள்.(இரண்டு வருடங்களின் பின் மறுத்து விடுவார்கள்). அதுவும் அல்லாமல் நாயன்மார்கள் கதைகளையும் சொல்லுங்கள். ஓவியாவுக்கு திருஞானசம்பந்தர் பற்றியும் காந்தியைபற்றி எல்லாம் சிறிதளவு சொல்லிக்கொடுத்து பேச விட்டு வீடியோ எடுத்து பதிவை இதில் ஏற்றி விடுங்கள். நான் பார்க்க வேண்டும் என்று சொல்லுங்கள்.இதை பார்த்து இனியா தானாகவே கற்றுக் கொள்வார். எல்லாம் ஒரு நம்பிக்கை தானே பாலும் தெளி தேனும் கலந்து ஊட்டுவோம் தமிழ் வளர்ப்போம்.நன்றி வாழ்த்துக்கள்....!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் கருத்தை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இணையம் இப்படிப்பட்ட சொந்தங்களை அளித்திருக்கிறது என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது.

      நாயன்மார்கள் கதைகளை, நான் என் குழந்தைக்கு மட்டும் சொல்லாமல், மற்ற நண்பர்களின் குழந்தைகளுக்கும் நாடகமாக சொல்லி, அவர்களையும் நடிக்க வைக்கிறேன்.

      சென்ற ஆண்டில் குழந்தைகள் நடித்த அப்பூதி அடிகள் நாடகம் மிகுந்த வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, இந்த வருடமும் சேக்கிழார் விழாவை நடத்துபவர்கள், அம்மாதிரியான வேறு ஒரு நாயன்மாரின் வாழ்க்கையை நாடகமாக, குழந்தைகளை வைத்து நடத்துங்கள் என்று கேட்டிருக்கிறார்கள். நான் தமிழகம் சென்று வந்த பிறகு, அதற்கான வேலைகளை செய்யலாம் என்று இருக்கிறேன்.

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோதரி.

      நீக்கு
  7. சகோ இப்படியே குழந்தைகள் கேள்வி கேட்பதை ஊக்கபடுத்துங்கள் .
    அவர்கள் மேலும் சிந்திக்கத்தொடங்குவார்கள் இல்லையா ?
    அப்படியே செந்தமிழும் கற்றுக்கொள்கிறார்கள் அப்டிதானே ?
    வாழ்த்துகள் ஓவியா , இனியா !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்களை தொடர்ந்து கேள்வி கேட்பதை ஊக்கப்படுத்திக்கொண்டு தான் இருக்கிறோம் சகோ!!. ஆனால் சில சமயம் அவர்கள் கேக்கும் கேள்விக்கு நமக்கு தான் பதில் தெரிய மாட்டேங்குது.
      வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

      நீக்கு
  8. செல்லங்களுக்கு வாழ்த்துகள். மகாபாரதம் பார்த்து கேள்விகள் கேட்பதற்கு....

    எங்கள் மகள் கூட “ஒரு அம்மாவுக்கு மூணு பாப்பா பொறக்குமா” என்று மிகுந்த ஆச்சரியத்துடன் கேட்டிருக்கிறாள்....:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.
      கண்டிப்பாக தொடர்ந்து தங்கள் மகளை மாகாபாரதம் பார்க்க வையுங்கள். வாழ்க்கையில் எப்படி இருக்கக் கூடாது, எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் பார்த்து தெரிந்துக்கொள்வார்கள்.

      நீக்கு
  9. சிறப்பான பகிர்வு.....

    பல கேள்விகள்.... குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது திணறுகிறோம்...... :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் வெங்கட் சார். அவர்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு நம்மால் பதில் சொல்ல முடியாமல் போகிறது.

      நீக்கு
  10. பாவாடை சட்டை போட்டு, அவுங்களை மாதிரி செயின், நெத்திச்சூடி எல்லாம் போடணும்னு சொல்லி, அதெல்லாம் போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறதை பார்த்து கண்களிம் மனமும் நிறைகிறது..பகிர்வுகளுக்கு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி அம்மா.

      நீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. செல்வங்களுக்கு வாழ்த்துக்கள். மகாபாரதக்கதை தன்னுள்ளே பல கேள்விகளையும் பதில்களையும் வைத்துள்ளது. சரியான பொருள் புரியாமல் முதலில் படித்தாலும் பிள்ளைகள் வளர வளர நல்லதும் கெட்டதும் அவர்களுக்குத் தெரியவரும்!
    கதை சொல்வதைத் தொடருங்கள்.
    அன்புடன்
    சொ.வினைதீர்த்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி வினைத்தீர்த்தான் அண்ணன்.

      நீக்கு