புதன், 28 மே, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 3 (பாடம் கற்றுக் கொடுக்கும் முறை)




இந்த பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடத்தில் ஆங்கிலம் மற்றும் கணிதப் பாடங்கள் எவ்வாறு சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்று பார்க்கலாம். இங்கே நான் ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும். அதாவது வகுப்பறைக்குள் நடப்பதை ஓவியா ஞாபகம் வைத்து சொல்வதையும், வகுப்பில் அவர்கள் பயன்படுத்துகின்ற பயிற்சி தாள்களையும் வைத்து தான் நான் இங்கே எழுதுகிறேன்.

ஓவியா பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தபொழுது, அவருக்கு A,B,C,D பாட்டாக சொல்ல மட்டும் தான் தெரியும். மற்றபடி அவருக்கு எழுத்துக்களையெல்லாம் பார்த்துச் சொல்லத் தெரியாது. அவருடைய பெயரை மட்டும் எழுதத் தெரியும். அதே மாதிரி எண்களில் ஒன்று முதல் பதினைந்து வரை மட்டும் தான் சொல்லத் தெரியும். நிறங்களை சொல்லத் தெரியும். மற்றபடி வேறு எதுவும் தெரியாது. ஆனால் பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்து ஏறக்குறைய நான்கு மாதங்களில் அவருக்கு A,B,C,D எப்படி கேட்டாலும் தெரியும், மேலும் எழுத்துக்கூட்டி படிக்க முயற்சிக்கிறார். இரெழுத்து, மூன்றெழுத்து வார்த்தைகள் எல்லாம் எழுத்துக்கூட்டி படிக்கிறார். எண்களில் ஒன்று முதல் முன்னூறு வரை சொல்கிறார். ஒரு அடுக்கு (single digit) எண்களை கூட்டவும், கழிக்கவும் தெரிகிறது. எப்படி இவ்வளவு குறுகிய காலத்தில் இவ்வளவு தெரிகிறது என்று எனக்கு ஒரே ஆச்சிரியம். இத்தனைக்கும் நாங்கள் வீட்டில் தனியாக சொல்லிக்கொடுப்பது இல்லை. (வெறும் வீட்டுப்பாடங்கள் மட்டும் தான் சொல்லிக்கொடுக்கிறோம்).

ஓவியாவிடம் இன்றைக்கு என்ன படித்தீர்கள் என்று தினமும் கேட்கும்பொழுதுதான், இங்கு சொல்லிக்கொடுக்கும் முறையே வித்தியாசமானது என்று தெரிந்தது. வகுப்பில் கொஞ்ச நேரம் ஆங்கிலப் பாடம்,கொஞ்ச நேரம் கணிதப்பாடம், கொஞ்ச நேரம் ஏதாவது கிராஃப்ட் வேலைப்பாடு செய்வது,கொஞ்ச நேரம் கதை படிப்பது (story reading) என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆங்கிலத்தை A – Apple, B – Bat என்று சொல்லிக்கொடுக்கமாட்டார்களாம். அதற்கு பதில் “போனிக்ஸ் (PHONICS) முறையில் தான் சொல்லிக்கொடுப்பார்களாம். அதாவது வார்த்தைகளை உச்சரிக்கும்போது ஏற்படுகிற ஒலியை வைத்து சொல்லிக்கொடுக்கிறார்கள். அடிக்கடி ஓவியா, ஏதாவது ஒரு வார்த்தையை சொல்லி,அதனுடைய முதல் வார்த்தை இந்த எழுத்தில் ஆரம்பிக்கிறது என்று சொல்லுவார். அதே மாதிரி, காரில் செல்லும்போது, சாலையில் தெரியும் பெரிய எழுத்துக்களை எல்லாம் எழுத்துக்கூட்டி படிக்க முயற்சிக்கிறார். நாம் ஏதாவது ஒரு வார்த்தைக்கு எழுத்துக்கோர்வையை (spelling) கேட்டால், உடனே அந்த வார்த்தையை phonic முறையில் உச்சரித்து பார்த்து, எழுத்துக்கோர்வையை சொல்ல முயற்சிக்கிறார். வகுப்புகளில் worksheets போன்றவற்றை பயன்படுத்தி எழுதவும், படிக்கவும் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்த worksheets சிலவற்றை கீழே பார்க்கலாம்.





இதே மாதிரி worksheetsசை பயன்படுத்தித் தான் எண்களையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.











அந்த worksheetsகளில் எல்லாம் அவர்களை கலர் பண்ணச் சொல்லி, வகுப்பை போர் அடிக்காமல் சுவாரசியமாக கொண்டு செல்கிறார்கள். நோட்டுக்களையே அவர்கள் பயன்படுத்துவது கிடையாது. எல்லாம் இந்த மாதிரி worksheets தான். இதையெல்லாம் ஒரு ஃபைலில் போட்டு வைக்கச் சொல்கிறார்கள். 


(இப்படி தான் பேட்டர்ன் (pattern) கான்செப்டை கற்றுக்கொடுக்கிறார்கள்) 

சில நாட்களுக்கு முன்பு, ஒரு நாள் ஓவியா என்னிடம், “அப்பா உங்களுக்கு 3 + 4 = என்னவென்று தெரியுமா என்று கேட்டார்கள். நான் தெரியாது என்று சொன்னவுடன், இது கூட உங்களுக்கு தெரியலையா என்று சொல்லி, இரண்டு கைகளையும் பயன்படுத்தி 7 என்று கூறி, இது மாதிரி தான் எங்க மிஸ் சொல்லிக்கொடுத்தார்கள் என்று சொன்னார்கள்”. அதே மாதிரி இங்கு கழித்தலை, மாணவர்களுக்கு “from 5 take 3 = 2 “ என்று தான் சொல்லிக்கொடுக்கிறார்கள்.

இவை போக வாரவாரம் புதன்கிழமை நூலகத்திலிருந்து புத்தகத்தை வீட்டிற்கு எடுத்து கொண்டு வரலாம். அவரவருக்கு பிடித்தமான புத்தகத்தை வீட்டிற்கு கொண்டு வரலாம். அந்த புத்தகத்தை தினமும் அம்மணி ஒரு முறை படித்துக்காட்டுவார்கள். பள்ளியிலேயே நூலகப் புத்தகப்பை என்று ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.





(இந்த வார நூலகப் புத்தகம்)



(ஒவ்வொரு பக்கங்களிலும் இரண்டு அல்லது மூன்று வரிகள் தான் இருக்கும்)

ஒவ்வொரு திங்கட்கிழமை அன்று வகுப்புகளில் சில சைட் (sight words) வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கிறார்கள். உதாரணத்திற்கு “it “, “up”, “sit” போன்ற நான்கைந்து வார்த்தைகளை சொல்லிக்கொடுத்து அந்த வார்த்தைகளையே அட்டைகளில் பிரிண்ட் எடுத்து வீட்டுப்பாடமாக கொடுக்கிறார்கள். வீட்டுபாடத்தையும் எவ்வாறு விளையாட்டாக செய்யச் சொல்கிறார்கள் என்பது பற்றி மற்றொரு பதிவில் சொல்லுகிறேன்.


வெள்ளி, 16 மே, 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் – 2 (வகுப்பறை)






போன பதிவுல ஓவியாவின் பள்ளிக்கூடம் பற்றி பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவில், அவருடைய வகுப்பறை எவ்வாறு இருக்கிறது என்று பார்க்கலாம்.

நம் ஊரில் வகுப்புகளின் பிரிவுகளுக்கு – A,B,C என்று சொல்லுவார்கள். அதாவது 1A, 1B etc.. (இப்பொழுதும் அதே நடைமுறை தான் என்று நினைக்கிறேன்). இங்கு வகுப்பு ஆசிரியர்களின் குடும்ப பெயரின் முதல் எழுத்தைத்தான் அந்தந்த வகுப்புகளின் பிரிவுகளுக்கு பயன்படுத்துகிறார்கள். ஓவியாவின் வகுப்பு KT. அதாவது Kinder, பிறகு அந்த வகுப்பாசிரியரின் குடும்ப பெயரின் முதல் எழுத்து.  
  



நான் முதலில் அவருடைய வகுப்பு அறையின் கதவைத்தான் புகைப்படம் எடுத்தேன். வகுப்பிற்குள் படம் எடுக்க அனுமதிப்பாளர்களா என்று ஒரு சிறிய சந்தேகம். சரி, அவர்களுடைய வகுப்பு ஆசிரியையிடம் கேட்டுப் பார்க்கலாம், அனுமதி தந்தால், புகைப்படம் எடுக்கலாம், இல்லையென்றால் இந்த ஒரு புகைப்படமே போதும் என்று நினைத்து, நான் அலுவலகத்துக்கு விடுமுறை எடுத்த நாளின் மாலையில் ஓவியாவின் வகுப்பு ஆசிரியையிடம் அனுமதி கேட்டேன். அவர்களும் நீங்கள் தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால் வகுப்பு தான் கொஞ்சம் அலங்கோலமாக இருக்கும், அது தான் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது என்று கூறி அனுமதியளித்தார்கள். நான் உடனே வகுப்பிற்குள் சென்று, ஏகப்பட்ட புகைப்படங்களை எடுத்தேன். அப்போது அவர்களே, ஓவியாவை கூப்பிட்டு உன்னுடைய இருக்கையில் போய் அமர்ந்துக்கொள், உன் தந்தை உன்னை படம் எடுப்பார் என்று கூறி ஓவியாவை உள்ளே அனுப்பி, இருக்கையில் அமரச் செய்தார்.  நான் எடுத்த புகைப்படங்களில் சிலவற்றை உங்களின் பார்வைக்கு வைக்கிறேன். 



இது தான் அவர்களுடைய வகுப்பு. நாம் துணியை காயப்போடுவது போல், இங்கு மாணவர்களின் படைப்புகளை கயிற்றில் தொங்க விட்டிருக்கிறார்கள். 



ஸ்மார்ட் போர்டு (SMART BOARD )



வகுப்பின் பின் பகுதி. இந்த வகுப்பில் படிக்கும் எல்லா மானவர்களின் புகைப்படத்தை ஒட்டியிருக்கிறார்கள்.  இதில் முதல் படம் தான் ஓவியாவின் படம். நான் இதை புகைப்படம் எடுக்கும்போது, ஓவியா அன்றைக்கு ஏதோ craft செய்திருக்கிறார்கள், அதனை நன்றாக ஒட்டுவதற்காக cellotape எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். 



இது ஓவியாவின் ஒரு படைப்பு



இது தான் அவருடைய இருக்கையாம்!!!



ஒவ்வொருவருடைய மேசையின் மீது அவர்களுடைய பெயரை ஒட்டி வைத்திருக்கிறார்கள். 

சரி, அவருடைய வகுப்பைப் பார்த்தாச்சு, இனி வகுப்பில் அவருக்கு எவ்வாறு கல்வியை சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம். 

பின் குறிப்பு: வகுப்பில் எவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை ஓவியா சொல்வதை வைத்து தான் நான் எழுதுகிறேன். 

ஞாயிறு, 11 மே, 2014

ஓவியா இனியாவின் அன்னையர் தின பரிசுகள்






இங்கு இந்த அன்னையர் தினம், தந்தையர் தினம் போன்ற தினங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு அத்துப்படி. அந்த அளவிற்கு பள்ளியிலும் சரி, டே கேர் நிலையங்களிலும் சரி, அந்த தினங்களை பிரபலப்படுத்தி விடுவார்கள். இனியா வாரத்திற்கு இரு நாட்கள் டே கேர் செல்கிறார்கள். அன்னையர் தினம் ஞாயிற்றுக் கிழமை வந்தபடியால், அந்த டே கேரில் சென்ற வாரமே அன்னையர் தினத்தை கொண்டாடி விட்டார்கள். அன்றைக்கு அங்கு வரும் அனைத்து குழந்தைகளின் அன்னையர்களையும் அழைத்து கேக் எல்லாம் வெட்டி பிரமாதப்படுத்திவிட்டார்கள். போதாக்குறைக்கு, குழந்தைகளுக்கு அவர்களே அட்டையில் ஒரு கைவினைப் பொருளை செய்து அதில் அன்னையர்களை வாழ்த்தி எழுதியிருக்கிறார்கள்.  அந்த கைவினைப் பொருளை குழந்தைகளின் கையில் கொடுத்து, அதை அவர்கள் தங்கள் அன்னையிடம் கட்டிப்பிடித்து “HAPPY MOTHER’S DAY” என்று சொல்லி கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். இதில் இனியா தன் தாய்க்கு கொடுத்த அன்பு பரிசு தான் கீழே உள்ள படம்.





ஒரு அட்டையில், சிறிய கைப் பை (handbag) மாதிரி செய்து, அதில் உள்ளே அன்னையரை போற்றக்கூடிய வசனங்களை எழுதி கீழே இனியாவின் பெயரைப் போட்டு கொடுத்திருக்கிறார்கள். அதை அவர்கள் தன் தாயிடம் “HAPPY MOTHER’S DAY” என்று சொல்லி கொடுத்திருக்கிறார்கள்.         

இது டே கேர் நிலையத்தில் நடந்த விஷயம். ஓவியாவின் பள்ளிக்கூடத்தில், அன்னையர் தினத்தில், அன்னைக்கு பரிசு கொடுப்பதற்காகவே ஒரு ஸ்டால் ஒன்றை வைத்திருக்கிறார்கள். அதில் $4, மற்றும் $6க்கு விதவிதமான பரிசுப் பொருட்களை வைத்து, குழந்தைகளை ஈர்த்து இருக்கிறார்கள். ஓவியாவும், நீங்கள் வாரா வாரம் வங்கியில் போடுவதற்காக எனக்கு கொடுக்கும் பணத்திலிருந்து நான்கு டாலர்களை எடுத்துக் கொடுங்கள், நான் உங்களுக்கு ஒரு பரிசு வாங்கிக் கொடுக்கிறேன் என்று சொன்னார்கள். நாங்களும் நான்கு டாலரை கொடுத்தோம். ஓவியாவும் அந்த பள்ளிக்கூடத்திற்குள் இருக்கும் கடையில் என்ன வாங்குவது என்று ரொம்ப யோசித்து, இறுதியாக வாங்கியது தான் கீழே உள்ளே படம்.



இதுவும் பார்க்க ஒரு குட்டி கைப் பை (handbag) மாதிரி தான் தெரியும். ஆனால் உள்ளே பார்த்தால்,







ஒரு பக்கத்தில், சில்வரில் ஒரு சின்ன கத்தி, கத்திரிக்கோல், நெகம் வெட்டும் கருவி மற்றும் ஒரு போர்ஸிப் போன்ற ஒரு கருவி (இதற்கு எனக்கு சரியான பேர் தெரிய வில்லை). மற்றொரு பக்கத்தில் ஒரு சின்ன அட்டையை மட்டும் வைத்திருக்கிறார்கள். அதில் ஓவியா,HAPPY MOTHERS DAY”LOVE FROM OVIYA” என்றும், இவ்விரு வாக்கியங்களை சுற்றி, இருதய படங்களை வரைந்து, தன் அன்னைக்கு பரிசு அளித்திருக்கிறார்.


இந்த இரண்டு பரிசுகளையும் பெற்றுக்கொண்ட என் வீட்டு அம்மணி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. என்னிடம், "நீங்கள் மகளிர் தினத்துக்கு எனக்கு ஒரு பரிசையும் கொடுக்கலை, ஆனால் என் செல்வங்கள் எனக்கு அன்னையர் தினத்துக்கு மறக்க முடியாத பரிசை அளித்துவிட்டார்கள். அவர்களைப் பார்த்தாவது நீங்கள் கற்றுக்கொள்ளுங்கள் என்று எனக்கு பாடம் எடுத்து விட்டார்கள்.  (நான் கணவனாக அமைந்ததே பெரிய பரிசு என்று அம்மணிக்கு ஏன் தான் புரிய மாட்டேங்குதோ!!!!)

செவ்வாய், 15 ஏப்ரல், 2014

ஓவியாவின் பள்ளிக்கூட அனுபவங்கள் - 1



(முதல் நாள் பள்ளிக்கூட வளாகத்தில்)



(வகுப்பறையை நோக்கி செல்லுதல்)



(வகுப்பறைக்குள் செல்லுதல்)




(வகுப்பறையில் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் பையை மாட்டுதல். பைக்குள் புத்தகங்கள் எல்லாம் இருக்காது. அவர்களின் லஞ்ச் பாக்ஸ், ஜாக்கெட் போன்றவைகள் தான் இருக்கும்)



இந்த தொடர் பதிவில் ஓவியா, பள்ளிக்கூடத்தில் நடந்த விஷயங்களை  எங்களிடம் பகிர்ந்து கொண்டதையும், இங்கு  அவருக்கு  எவ்வாறு தொடக்க கல்வி (primary education) சொல்லிக்கொடுக்கப்படுகிறது என்பதையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். (இங்கு நான் சொல்வதெல்லாம் இங்கில்பெர்ன் பள்ளிக்கூடம்(Ingleburn Public School) பற்றி தான் ).


ஓவியா பள்ளிக்கு செல்ல ஆரம்பித்து முதல்  பருவம்(TERM) முடிந்து இப்போது இரண்டு வார விடுமுறையில் இருக்கிறார். இங்குள்ள பள்ளிக்கூடங்கள் எல்லாம் சனவரி மாத கடைசியில் ஆரம்பித்து டிசம்பர் மாதம் பதினைந்து தேதிகளில் முடிவு பெரும்.  ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பருவமாக (TERM) சொல்லப்படுகிறது. முதல் மூன்று பருவங்கள் முடிவடையும்போது, இரண்டு வார விடுமுறை அளிக்கப்படுகிறது. கடைசி பருவத்தில் தான் ஆறு வார விடுமுறை அளிக்கப்படுகிறது.  காலை 9  மணிக்கு தொடங்கி மதியம் 3 மணிக்கு முடிவடைகிறது. இதில் 11 மணியிலிருந்து 11.30  மணிக்கு இடைவேளை. பிறகு மதிய உணவிற்கான இடைவேளை 1மணியிலிருந்து 1.40 மணி வரை. இதில் முதல் பத்து நிமிடம் சாப்பிடுவதற்கான நேரம். அடுத்து வரும் முப்பது நிமிடங்களும் விளையாட்டு நேரம். பத்து நிமிடத்திற்குள் சாப்பிட வேண்டும் என்று அவசியமில்லை, 40 நிமிடத்திற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும். ஆனால் எல்லா குழந்தைகளும் முதல் 10 நிமிடத்திற்குள் என்ன சாப்பிடுகிறார்களோ,அது தான் அவர்களின் மதிய உணவு. பிறகு விளையாட ஆரம்பித்து விடுகிறார்கள். இதில் பள்ளியிலேயே உணவகமும் இருக்கிறது. அதற்கு காலையிலேயே ஆர்டர் செய்து விடவேண்டும். "பள்ளி வங்கி"(School Banking) ஒன்று ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை காலையில் "Common Wealth Bank" என்ற வங்கி நடத்துகிறது. இதில் குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் தங்களுக்கு கொடுக்கும் பணத்தை, தங்களின் பெயரிலியே அந்த வங்கியில் கணக்கை ஆரம்பித்து சேமிக்கலாம். 


ஒவ்வொரு திங்கட் கிழமை காலையிலும் எல்லா வகுப்பு மாணவ மாணவியரும் ஒருங்கிணைத்து அசெம்ப்ளி (assembly) நடக்கும். அப்போது கொடியேற்றம் நடக்கும். இந்த அசெம்ப்ளியையும், கொடியேற்றத்தையும் பள்ளித் தலைவர்களாக (School Leader) விளங்கும் மாணவ மாணவியர்களே நடத்துவார்கள்.அப்போது ஆஸ்திரேலியாவின் தேசிய கீதத்தையும் , பள்ளிக்கான பாடலையும்  படுவார்கள். 




ஓவியா இப்போது பாலர் பள்ளியில் (kinder garden) படிக்கிறார்.  ஐந்து வயதில் பாலர் கல்வி (kinder garden), ஆறு வயதில் ஒன்றாம் வகுப்பு என்று படிக்க ஆரம்பிப்பார்கள். தொடக்க பள்ளியானது (Primary School ) பாலர் வகுப்பிலிருந்து ஆறாம் வகுப்பு (Kinder to Year6) வரை உள்ள பள்ளிக்கூடம். உயர் நிலைப் பள்ளியானது (High School) ஏழாம் வகுப்பிலிருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிக்கூடம். 


இங்குள்ள தொடக்க கல்வி முறை சற்றே வித்தியாசமாக இருக்கிறது. அதாவதுபாலர் வகுப்பிற்கு, ஆங்கிலம் மற்றும் கணிதம் தான் பாடங்கள். அந்த இரண்டு பாடங்களையும் எவ்வாறு சொல்லிக்கொடுக்கிறார்கள் என்பதை இனி வரும் பகுதிகளில் பார்க்கலாம். 





புதன், 2 ஏப்ரல், 2014

ஓவியாவின் கிராஃப்ட் வேலைப்பாடு (craft work)



இந்த படம் நான் இந்தியாவில் இருக்கும்போது, இங்கு வீட்டில் அவராக யோசித்து செய்தது. படங்களை தாளில் வரைந்து அதனை வெட்டி மற்றொரு வெள்ளைத்தாளில் ஒட்டியிருக்கிறார். 

இந்த படத்திற்கான அவரது விளக்கம்:

முதல் வரிசை:

முதல் வரிசையில் இருக்கும் மூன்று படங்களும் "HUMPTY DUMPTY" எனும் ஆங்கில பாட்டிற்கான படமாம். 

முதல் படம் HUMPTY ஒரு சுவற்றில் உட்கார்ந்திருக்கிறது.

இரண்டாவது படம் அது கீழே விழுகிறது. 

மூன்றாவது படம் வீரர்களும், குதிரையும் அவரை எழுபப்ப முடியவில்லை

Humpty Dumpty sat on a wall,
Humpty Dumpty had a great fall.
All the king’s horses,
And all the king’s men,
Couldn’t put Humptytogether again.


இரண்டாவது/மூன்றாவது வரிசை:

இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசையில் இருக்கும் படம் "BAA BAA BLACK SHEEP" எனும் பாடலுக்கான படமாம். 

அதில் முதல் படம் - Sheep 
இரண்டாவது படம் - Master 
மூன்றாவது படம் - Dame 
நான்காவது படம் - Little Boy 


Baa baa, Black Sheep,
Have you any wool?
Yes, marry, have I,Three bags full:
One for my master,
One for my dame,
And one for the little boy
That lives in the lane!





ஒவ்வொரு பாகமாக வெட்டப்பட்ட கோழியின் படத்தை அவர்கள் பள்ளியில் கொடுத்திருக்கிறார்கள், அதனை எல்லாம் சேர்த்து ஒட்டி வண்ணம் தீட்டியிருக்கிறார். 





இதுவும் பள்ளியில் செய்தது தான், தன்னுடைய  உள்ளங்கைகளை வெள்ளைத்தாளில் வைத்து வரைந்து, அதனை வெட்டி வைத்துக்கொண்டு மற்றொரு தாளை அரை வட்டமாக வெட்டி, அதன் பின் பகுதியில் இரண்டு கைகளை உடைய தாளை ஒட்டி, பிறகு வண்ணம் தீட்டியிருக்கிறார்




இது ஒரு பூனைக்குட்டியாம். இதுவும் பள்ளியில் தான் செய்திருக்கிறார். 



நான் ஓவியா, இனியாவிற்கென்று வலைப்பூவை தொடங்கி எழுதுவதே, பிற்காலத்தில் அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தவும், அவர்களும் இது மாதிரி எழுத வேண்டும் என்பதற்காகத்தான். பார்ப்போம் என்னுடைய எண்ணம் ஈடேறுகிறதா என்று. 


புதன், 5 மார்ச், 2014

விஜய் டிவியின் மகாபாரதமும் எங்கள் வீட்டு மகாராணிகளும்






கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சவுடனே, ஓவியா தினமும் இரவு கதை கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் எனக்கு தெரிஞ்ச ஏழெட்டு நீதிக் கதைகளையெல்லாம் சொல்லிக்கிட்டு இருப்பேன். திருப்பி திருப்பி கேட்ட கதைகளையே கேட்டு கேட்டு அவுங்களுக்கு போர் அடிக்க ஆரம்பிச்சுடுச்சு, அதனால புது கதை சொல்லுங்க, புது கதை சொல்லுங்கன்னு ஒரே நச்சரிப்பு. நானும் இந்தியாவிற்கு போயிட்டு வரும்போது, கொஞ்சம் நீதிக் கதைகள் புக் எல்லாம் வாங்கிக்கிட்டு வந்து அதிலேருந்து படிச்சு சொல்லுவேன். இதுல ஒரு நாள் வீட்டு அம்மணி, தன்னோட கற்பனை வளத்தை உபயோகப்படுத்தி, ஒரு கதை சொல்லியிருக்காங்க. அது ஓவியாவிற்கும் சரி, இனியாவிற்கும் சரி ரொம்ப பிடிச்சுப்போச்சு. அதற்கு பிறகு அவுங்க ரெண்டு பேரும் என்கிட்ட நீங்க புக் படிச்சு கதை சொல்லாதீங்க, அம்மா சொன்ன மாதிரி, நீங்களே யோசிச்சு சொல்லுங்கன்னு கேக்க ஆரம்பிச்சாங்க. நானும் உங்கம்மா மாதிரி எனக்கு யோசிக்க தெரியாது, அதனால அவுங்கக்கிட்டேயே கேட்டுக்குங்கன்னு சொல்லி சமாளிச்சேன். ஆனா ஓவியா, “நான் அம்மாக்கிட்டே கேட்டேன், அதுக்கு அவுங்களுக்கு அந்த ஒரு கதை தான் தெரியுமாம், அப்பாவுக்கு தான் இந்த மாதிரி சொந்தமா நிறைய கதையெல்லாம் தெரியும், நீ அப்பாக்கிட்டேயே கேளுன்னு சொல்லிட்டாங்கப்பான்னு” திருப்பி என்கிட்டேயே வந்து நின்னாங்க. அட கடவுளே! ஒரு நாள் என்னால கதை சொல்ல முடியாம அம்மணியை கதை சொல்ல சொன்னதுக்கு, என்னைய நல்லா பழி வாங்கிட்டாங்களேன்னு நினைச்சுக்கிட்டேன். வீட்டுல தூங்கப்போறதுக்கு முன்னாடி நீதிக்கதைகளை படிச்சவன், மறு நாளையிலிருந்து, அந்த கதை புத்தகத்தை trainல படிச்சுக்கிட்டு, இரவு அவுங்களுக்கு நானா யோசிச்சு சொல்றாமதிரி பில்டப் பண்னினேன். தினமும் இவுங்களுக்காக கதையை தேடித்தேடி படிக்கிறதுனால, என்னோட மத்த கதை புத்தகங்களை படிக்க முடியாம போயிக்கிட்டு இருந்துச்சு. அந்த நேரத்துல தான் ஆபத்வாந்தனாக, விஜய் டிவியில மாகாபாரதம் வர ஆரம்பிச்சுது (ஒரு வழியா தலைப்புக்கு வந்துட்டேனா!!!).


தினமும் நாம இரவு மகாபாரதம் பார்ப்போம், நீங்க படுக்கப்போகும்போது, நான் உங்களுக்கு புரியிர மாதிரி அன்னைக்கு டிவியில வந்த மகாபாரதக்கதையை சொல்றேன்னு ரெண்டு மகாரணிகளோடு ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டேன். எங்க வீட்டுல நாங்க “YUPPTV”யை கனெக்ஷன் கொடுத்திருக்கோம். அதுவும் எனக்கு இதெல்லாம் தெரியாது. ஒரு நண்பர் தன்னோட வீட்டுல விஜய் டி‌வி நிகழ்ச்சி எல்லாம் இணையம் மூலமா டிவியில பார்க்கிறோம்னு சொன்னாரு. உடனே, எங்க வீட்டு அம்மணிக்கு ஆசை வந்துடுச்சு. நம்ம வீட்டிலும் அந்த கனெக்ஷன் கொடுத்தா நானும் பார்ப்பேனேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க. நம்முடைய இணையம் வழியாக அந்த “YUPPTV” காரங்க, சன்,ஜெயா,விஜய்,ராஜ்,மக்கள் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குறாங்க. இதுல ஒரு சிறப்பு அம்சமே, 10 நாள் நிகழ்ச்சிகள் வரை பார்க்க முடியும். அன்றைய நிகழ்ச்சிகளை அன்றைக்கே பார்க்கணும்னு அவசியம் இல்லை. நாங்க முத நாள் நிகழ்ச்சியை மறு நாள் தான் பார்ப்போம். ஓவியாவுக்கும், இனியாவுக்கும் அந்த மகாபாரத நிகழ்சி ரொம்ப பிடிச்சுப் போயிடுச்சு. ஆனா, அவுங்களுக்கு, நிகழ்ச்சியில பேசுற தமிழ் புரியாது. ஆதனால தினமும் இரவு, அன்றைக்கு வந்த நிகழ்ச்சியை நான் அவுங்க அளவிற்கு கீழே இறங்கி புரியிர மாதிரி சொல்லுவேன். இதனால எனக்கு புதுசு புதுசா கதை சொல்ற வேலை இல்லாம போயிடுச்சு.

இதை பார்க்க ஆரம்பிச்சதிலிருந்து, வேற ஏதாவது ஒரு படத்துல “வாழ்க”ன்னு வந்தா போதும், உடனே இனியா, மகாபாரத்துல சொல்லுவாங்கன்னு ஆரம்பிச்சுடுவாங்க. அதுவும் கிருஷ்ணன் வருவதற்கு முன்பு, இசை ஒன்று வரும். அது வந்தவுடனே, இனியா கிருஷ்ணர் வரப்போராருன்னு ரன்னிங் காமென்டிரி கொடுத்துடுவாங்க. அதுல வர்ற கதாப்பத்திரங்கள் பேர் எல்லாம் ரெண்டு பேருக்கும் அத்துப்படி. அவுங்களை பொருத்தவரைக்கும் கௌரவர்கள் “BAD BOYS”, பாண்டவர்கள் “GOOD BOYS”. இதுல அவுங்களுக்கு பெரிய சந்தேகம் கர்ணன் “good boyயா, bad boyயான்னு”. அப்புறம் கர்ணன் கதாபாத்திரத்தை புரிய வச்சோம். பாப்பா எல்லாம் அம்மா வயிற்றிலுருந்து வராம எப்படி சாமி கொடுக்கிறாருன்னு பெரிய சந்தேகம். இப்படி அவுங்களுக்கு நிறைய சந்தேகம் தினமும் வரும். அதையெல்லாம் அவுங்க அளவிற்கு இறங்கிப் போய் புரிய வைப்போம். அப்புறம் பீமன் சாப்பிடுறதைப் பார்த்தா அவுங்களுக்கு அப்படி ஒரு சிரிப்பு வரும். ரெண்டு,மூணு வாரத்துக்கு முன்னாடி, திரௌபதி, யாகத்தீயிலிருந்து, வந்ததைப் பார்த்த ஓவியா, எப்படி அப்படி வர முடியும், அவுங்களுக்கு சுடாதான்னு ஏகப்பட்ட கேள்விகள். இதுல இனியா, திரௌபதியை பார்த்து, அழகா இருக்காங்கம்மான்னு கமெண்ட். லீவு நாள்ல ஒரு நாள் காலையில மகாபாரதத்தை பார்த்துட்டு, ரெண்டு பேரும், எங்களுக்கு பாவாடை சட்டை தான் வேணும்னு அடம்பிடிச்சு, அப்புறம் பாவாடை சட்டை போட்டு, அவுங்களை மாதிரி செயின், நெத்திச்சூடி எல்லாம் போடணும்னு சொல்லி, அதெல்லாம் போட்டு போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறதை பாருங்க.



எல்லாத்தைவிட ஒரு ஹைலைட்டான விஷயமே, ஓவியா எங்களிடம் ஒரு கேள்வியை கேட்டது தான். இனியா என்னைய அக்கான்னு கூப்பிடுறா, அது மாதிரி நானும் ஒருத்தவங்களை அக்கான்னு கூப்பிடணும், அதுவும் ஒரு பாப்பா உங்க வயித்துக்குள்ளேருந்து வந்து உடனே என்னைய விட அது பெருசாயிடணும்னு” சொன்னாங்க. நாங்க பாப்பா உடனே எப்படி, உங்களை விட பெருசா ஆவாங்கன்னு கேட்டோம், அதுக்கு அவுங்களோட பதில், “மகாபாரதத்துல பீமன் அண்ணா ஒரு பாப்பாவை தூக்கி சாமிக்கிட்ட வைப்பாங்க, அந்த பாப்பா உடனே பெருசா ஆயிட்டாங்க, அது மாதிரி தான் நான் கேக்கிறதுன்னு” சொன்னாங்க. அப்புறம் அவுங்களுக்கு அதை ஒரு மாதிரி புரிய வச்சோம்.

விஜய் டிவியில வர்ற மகாபாரதம் எந்த அளவிக்கு உண்மைன்னு தெரியலை,  அந்த நிகழ்ச்சியினால சின்ன குழந்தைகளுக்கு நம்மளோட இதிகாசம் தெரியவருது,     அதோட நிறைய நல்ல கருத்துக்களையும் நம்மலாள அவுங்களுக்கு சொல்ல முடியுது.


சனி, 15 பிப்ரவரி, 2014

அப்பூதி அடிகளின் மகனாக ஓவியா


அப்பூதி அடிகள் வாழ்கை வரலாறு நாடகத்தில் அப்பூதி அடிகள் நாடகம்  ஓவியா அவரின் மூத்த மகன் திருநாவுக்கரசராக நடித்தார். நான் செய்த ஒரு மிகப் பெரிய தப்பு,  உங்களுக்கு வேட்டி கட்டிவிடுவோம் என்று ஓவியாவிற்கு முன்பே சொல்லாதது தான். அந்த நிகழ்ச்சியன்று அவருக்கு வேட்டி கட்டிவிட்ட பாதிப்பை இந்த புகைப்படத்தை பாருங்கள்.




சும்மாவே, அவருக்கு ஆண்களை பிடிக்காது. தன் வயதையொட்டிய ஆண் குழந்தைகளிடம் சட்டென்று பழக மாட்டார். அப்படி இருக்கிறவரிடம் நான் சேக்கிழார் விழா நிகழ்ச்சியன்று தான், நீ வேட்டி கட்டிக்கணும்னு சொல்லி, ஒரு பெரிய வெள்ளை துண்டை அவருக்கு வேட்டியாக, கட்டிவிட்டோம். அதைக் கட்டிவிட்டவுடன் அவருக்கு ஒரே அழுகை வர ஆரம்பித்து விட்டது. நான் நடிக்க மாட்டேன். எனக்கு பிடிக்காத டிரஸ் போட்டுவிட்டீங்கன்னு ஒரே அழுகை. இதுல வீட்டு அம்மணி வேற ஓரேடியா விபூதியை அவுங்க கழுத்துல பூசிட்டாங்க. அதுவும்  அவுங்களுக்கு தொண்டையை உறுத்த ஆரம்பிச்சிருக்கு. எனக்கோ ரொம்ப பயாமகி விட்டது. என்னடாது, ஓவியா நடிக்கலைன்னா வேற என்ன பண்றதுன்னு ஒரே யோசனை. நான், அம்மணி அப்புறம் என்னோட மாமியார் எல்லோரும் ஓவியாவை சமாதானம் செஞ்சு எப்படியோ நடிக்க வச்சுட்டோம். மேடைல கூட முகத்தை தூக்கிவச்சுக்கிட்டே தான் நடிச்சாங்க. ஓவியாவோட இந்த அழுகையில, என்னுடைய மாமியார் தான் ரொம்ப பயந்து போய், முருகா, உனக்கு உண்டியல்ல காசு போடுறேன், எப்படியாவது ஓவியா ஒழுங்கா நடிச்சிடணும்னு முருகனுக்கு லஞ்சம் எல்லாம் கொடுத்தாங்க.





மேலாயுள்ள படத்தில அப்பூதி அடிகளின் மகன் இலையை அறுக்கும்போது பாம்பு கடித்து இறந்து விடுவார். அவரை கோவிலில் படுக்க வைத்து திருநாவுக்கரசர் பதிகம் பாடி, அவரை உயிருடன் எழச் செய்வார். நான் சொல்லிக்கொடுத்தப்படி, தர்ஷன் ஒரு முறை பதிகம் படித்தவுடன், ஓவியா எந்திரிப்பார். ஆனால் அந்த நிகழ்ச்சியின் போது, அவர் எந்திரிக்கவில்லை. தர்ஷனுக்கு என்னப்பண்றதுன்னு தெரியலை. நான் பிண்ணாடியிருந்து, தர்ஷனை இன்னொரு முறை அந்த பதிகத்தை பாடச் சொன்னேன். அவரும் பாடினார். நல்லவேளையாக இரண்டாவது தடவை பாட்டு முடிந்தவுடனே, ஓவியாவும் எந்திரிச்சு, என் வயிற்றில் பாலை வார்த்தார். 

அந்த நாடகம் முடிஞ்சவுடனே, ஓவியா, இனிமே எனக்கு பாய் டிரஸ் போட்டீங்கன்னா நான் நாடகத்துலேயே நடிக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. இவுங்கக்கிட்டேயிருந்து நான் கத்துக்கிட்ட ஒரு பாடம் என்னன்னா, இந்த மாதிரி குழந்தைகள் நாடகங்களில், குழந்தைகள் கிட்ட முதல்ல அவுங்க கிட்ட இந்த கதாப்பத்திரத்தில நீங்க நடிக்கிறீங்களான்னு கேட்டுட்டு தான் அவுங்களை நடிக்க வைக்கவே ஆரம்பிக்கிறேன்.